கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் (Keheliya Rambukwella) மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு (Ramith Rambukwella) சொந்தமான இரண்டு சொகுசு வீடுகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடையுத்தரவை இன்று (19) இடம்பெற்ற விசாரணையின் போது கொழும்பு மேல் நீதிமன்றம் (High Court of Colombo) பிறப்பித்துள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் (CIABOC) முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன (Manjula Thilakaratne) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தடை உத்தரவு
ரமித் ரம்புக்வெல்ல கொள்ளுப்பிட்டி (Kollupitiya) பகுதியில் உள்ள சொகுசு வீடமைப்புத் தொகுதியில் இரண்டு வீடுகளை தலா 80 மில்லியன் மற்றும் 65 மில்லியனுக்கு கொள்வனவு செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், இது தொடர்பில் விசாரணை நடத்தி சொத்துக்களை உடைமையாக்க தடை உத்தரவு பிறப்பிக்குமாறு ஆணைக்குழு இன்று (19) நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் கோரிக்கையை பரிசீலித்த உயர்நீதிமன்ற நீதிபதி, சம்பந்தப்பட்ட சொத்துக்களுக்கு டிசம்பர் 19 ஆம் திகதி வரை தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.