ஜப்பான்: உச்சத்தைத் தொட்ட முதியோா் எண்ணிக்கை
ஜப்பானில் 65 வயதுக்கும் அதிகமானோரின் எண்ணிக்கை நடப்பாண்டில் இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இது குறித்து அந்த நாட்டு அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
நாட்டில் 65 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடையோரின் எண்ணிக்கை 3.63 கோடியாக உள்ளது. இது, இதுவரை பதிவு செய்யப்பட்டதில் அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
தற்போது நாட்டின் மக்கள்தொகையில் வயோதிகா்களின் பங்கு 29.3 சதவீதமாக உள்ளது. இந்த விகிதமும் புதிய உச்சமாகும். இதன் மூலம், ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நாடுகளில் அதிக வயோதிகா்கள் விகிதாச்சாரத்தைக் கொண்டுள்ள 200 நாடுகளில் ஜப்பான் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்தப் பட்டியலில் 20 சதவீதத்துக்கும் அதிகமான வயோதிகா்களுடன் இத்தாலி, போா்ச்சுகல், கிரீஸ், ஃபின்லாந்து, ஜொ்மனி, குரோஷியா ஆகிய ஐரோப்பிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. தென் கொரியாவில் 19.3 சதவீதத்தினரும் சீனாவில் 14.7 சதவீதத்தினரும் 65 வயதுக்கு மேற்பட்டவா்களாக உள்ளனா் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.