உங்களின் அன்பானவர்களிடம்… இஸ்ரேல் மக்களின் அலைபேசிகளில் பகிரப்பட்ட பகீர் குறுந்தகவல்
தங்கள் மக்களின் அலைபேசிகளில் பகிரப்பட்ட இழிவான குறுந்தகவல்களுக்கு பின்னணியில் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா இருப்பதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.
இப்போதே விடைபெற்றுக்கொள்ளுங்கள்
லெபனானில் திடீரென்று பேஜர்கள் மற்றும் walkie-talkie கருவிகள் வெடித்த சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக நம்பப்படும் நிலையில், தற்போது இஸ்ரேல் மக்களின் அலைபேசிகளில் பகிரப்பட்டுள்ள குறுந்தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதில், உங்கள் அன்பானவர்களிடம் இப்போதே விடைபெற்றுக்கொள்ளுங்கள் எனறும் கவலை வேண்டாம் நரகத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மக்கள் மீதான இந்த சைபர் தாக்குதலானது பெயர் குறிப்பிடாத அலைபேசி சேவையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது என்றே இஸ்ரேல் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
புதன்கிழமை இரவு நடத்தப்பட்ட இந்த சைபர் தாக்குதலில், சுமார் 5 மில்லியன் குறுந்தகவல்கள் பகிரப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் உளவியல் தாக்குதல் என்றே இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பழிவாங்குவது உறுதி
மூன்று வகையான குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அனுப்பிய இணைய பக்கம் உடனடியாக முடக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஈரானும் ஹிஸ்புல்லாவும் இதுவரை பதிலளிக்கவில்லை.
இந்த வாரத்தில் இஸ்ரேல் முன்னெடுத்த நூதன தாக்குதலில் லெபனானின் 37 பேர்கள் கொல்லப்பட்டதுடன், காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,000 கடந்துள்ளது. இதனையடுத்து ஈரானும் ஹிஸ்புல்லாவும் பழிவாங்குவது உறுதி என அறிவித்துள்ளது.