நடுவானில் கண்ணில் தென்பட்ட எலி! அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட விமானம்!
எலியின் காரணமாக ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் விமானம் அவசர நிலை தரையிறக்கம் செய்யப்பட்டது.
விமானத்தில் எலி
ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ்(Scandinavian Airlines) (SAS) விமானத்தில் எலி ஒன்று தோன்றியதால் புதன்கிழமை கோபன்ஹேகனில்(Copenhagen) அவசரநிலை தரையிறக்கம் செய்ய வேண்டியிருந்தது.
நார்வேயின் தலைநகரான ஒஸ்லோவிலிருந்து(Oslo) ஸ்பெயினின் மலாகாவுக்கு(Malaga) சென்று கொண்டிருந்த விமானம், எலியால் ஏற்படுத்தக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக திசை திருப்பப்பட்டது.
SAS செய்தித் தொடர்பாளர் ஒய்ஸ்டின் ஷ்மிட்டின்(Oystein Schmidt) கூற்றுப்படி, எலிகள் விமானத்தில் நுழைவதைத் தடுக்க ஏர்லைன்ஸ் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்துகிறது, ஏனெனில் அவை மின்சார வயரிங் அமைப்புகளை சேதப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
மாற்று விமானத்தில் பறந்த பயணிகள்
விமான பயணி ஜார்லே போரெஸ்டாட்(Jarle Borrestad), எலி தனது அருகில் அமர்ந்திருந்த பயணியின் உணவு பெட்டியிலிருந்து வெளியே வந்ததாக விவரித்துள்ளார்.
அசாதாரண சூழ்நிலை இருந்தபோதிலும், போரெஸ்டாட் மற்றும் பிற பயணிகள் அமைதியாக இருந்ததாகவும், இருப்பினும் எலி தனது கால்களுக்கு இடையே ஊர்ந்து செல்லாமல் இருக்க தனது சாக்ஸை கால் சட்டைக்கு மேல் போட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.
விமானம் கோபன்ஹேகனில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் பயணிகள் மாற்று விமானம் மூலம் மலாகாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.