திருப்பதி லட்டு விவகாரம் : “முதலமைச்சர் சொல்வது கட்டுக்கதை” – ஜெகன்மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி!
திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் இருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியானதையடுத்து, முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி விளக்கமளித்துள்ளார்.
ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் திருப்பதியில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், தாவரக் கொழுப்புகள், விலங்குகளின் கொழுப்புகள் ஆகியவை கலந்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் நாடு முழுவதும் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அந்த தகவலை தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களுடன் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு தொடர்ந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் அரசியலை நடத்தி வருகிறார் என குற்றம்சாட்டினார்.
மேலும், விஜயவாடா, ஏலூரு ஆகிய நகரங்களில் சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக ஏராளமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதில் அரசு முழு அளவில் தோல்வியடைந்துவிட்டது. தன்னுடைய அரசின் தோல்வி தொடர்பான கவனத்தை மக்களிடமிருந்து திசை திருப்பவே சந்திரபாபு நாயுடு தற்போது இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார் என்று ஜெகன்மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், திருப்பதி லட்டு விவகாரத்தில் முதலமைச்சர் சந்திரபாபு கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், தேசிய அளவிலான அங்கீகாரம் வாங்கும் நிறுவனங்களிடமிருந்தே நெய் கொள்முதல் செய்யப்பட்டதாகவும் தனது ஆட்சிக்காலத்தில் டெண்டர் நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும், ஒவ்வொரு நெய் டின்களும் 3 கட்டப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன என்றும், சந்திரபாபு ஆட்சிகாலத்தில் 15 முறை தரமற்ற நெய் நிராகரிக்கப்பட்டதாகவும், தனது ஆட்சிக்காலத்தில் 18 முறை தரமற்ற நெய் நிராகரிக்கப்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடு மோசமான அரசியலுக்காக கடவுளை பயன்படுத்துகிறார் என்றும், முதலமைச்சராக இருக்கும் ஒருவர் இப்படி பொய் கூறுவது நியாயமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.