பருவநிலை மாற்றத்துக்கு எதிராக வித்தியாசமாக போராடும் 11 வயது சிறுவன்
பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போரடும் பலர் இருக்கிறார்கள். சிலர், குரல் கொடுக்கிறார்கள், சிலர் சாலை மறியல்களில் ஈடுபடுகிறார்கள்.ஆனால், அதனாலெல்லாம் பயன் இருக்கிறதா என்பது தெரியவில்லை.
இந்நிலையில், ஜேர்மன் சிறுவன் ஒருவன், வெறுமனே குரல் எழுப்பிக்கொண்டிருக்காமல் நடைமுறையில், பயனுள்ள வகையில், வித்தியாசமாக, பருவநிலை மாற்றத்துக்கு எதிராக களத்திலேயே இறங்கிவிட்டான்.
பருவநிலை மாற்றத்துக்கு எதிராக வித்தியாசமாக போராடும் சிறுவன்
ஜேர்மனியைச் சேர்ந்த Lenny Kraut (11), பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போராடுவதற்காக, இயற்கை முறையிலேயே போராடி வருகிறான்.
ஆம், 17,000 மரங்களை நட்டுள்ள லென்னி என்னும் அந்தச் சிறுவன், ஒரு காட்டையே உருவாக்க திட்டமிட்டுள்ளான்.
வெறுமனே சத்தமிட்டுக்கொண்டிருக்காமல், வெப்பமாகிக்கொண்டிருக்கும் பூமியை குளிர்விக்கும் வகையில், மரங்களை நட்டு வளர்ப்பதென முடிவு செய்தான் லென்னி.
ஆனால், மரம் நட இடம் வேண்டுமே. ஆகவே, நிலம் வாங்குவதற்காக நன்கொடை சேகரிக்க ஆரம்பித்தான் லென்னி.
முதன்முதலாக லென்னியின் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் 3 யூரோக்கள் கொடுக்க, சமூக ஊடகம் வாயிலாக லென்னியின் வித்தியாசமான போராட்டத்துக்கு ஆதரவு கிடைக்க, அவன் 32,000 யூரோக்கள் சேகரித்த நிலையில், அவன் வாழும் நகரமான karben என்னும் நகர மக்கள், தாங்களும் பங்களித்து அதை 40,000 யூரோக்களாக்கினார்கள்.
அதைக் கொண்டு நிலம் ஒன்றை வாங்கி, வனத்துறை நிபுணரான Eckhard Richter என்பவர் உதவியுடன் சரியான மரங்களைத் தேர்ந்தெடுத்து வளர்த்துவருகிறான் லென்னி.
இரண்டு ஆண்டுகளில், 17,000 மரங்கள் நட்டு வளர்த்துவருகிறான் லென்னி. அந்த மரங்கள் வளர்ந்து ஒரு காடாக மாற பல ஆண்டுகள் ஆகலாம்.
என்றாலும், அப்போது அந்த மரங்கள் புவி வெப்பமயமாதலைக் குறைக்க தங்கள் பணியைச் செவ்வனே செய்துகொண்டிருக்கும் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
ஆக, பருவநிலை மாற்றத்துக்கெதிராக அரசுகள் ஏதாவது செய்யவேண்டும் என குரல் மட்டும் கொடுக்காமல், செயலில் இறங்கிய லென்னியைப் போல, மற்ற பருவநிலை ஆர்வலர்களும், பூமியின் மீதும் எதிர்கால சந்ததிகள் மீதும் அக்கறை உள்ள பொதுமக்களும் செயலில் இறங்கினால், நிச்சயம் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.