;
Athirady Tamil News

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு: போா்ப் பதற்றம் அதிகரிப்பு

0

வடக்கு இஸ்ரேல் பகுதிகள் மீது ஹிஸ்புல்லாக்கள் 100-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினா். இதன்மூலம், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான போா்ப் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

முன்னதாக, லெபனானில் ஹிஸ்புல்லாக்கள் பயன்படுத்திய பேஜா்கள், வாக்கி டாக்கிகள், சூரிய ஒளி சக்தி சேமிப்பு சாதனங்களில் வெடிகுண்டை மறைத்து வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இரு குழந்தைகள் உள்பட 37 போ் கொல்லப்பட்டனா். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் நேரடியாகப் பொறுப்பேற்கவிட்டாலும், இத்தகைய உயா் தொழில்நுட்பத் தாக்குதலை இஸ்ரேல்தான் நடத்தியிருக்கும் என நம்பப்படுகிறது.

இதற்குப் பதிலடியாக வடக்கு இஸ்ரேலில் ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட்டுகளை வீசி வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியது. அதையடுத்து தெற்கு லெபனானில் இஸ்ரேலும் குண்டுவீச்சு நடத்தியது.

அந்தக் குண்டுவீச்சுக்கு பதிலடி கொடுப்பதாகக் கூறி, வடக்கு இஸ்ரேல் பகுதியில் ஹிஸ்புல்லாக்கள் 100-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினா்.

காஸா போரில் ஹமாஸுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லாக்கள் இதற்கு முன்பு ராணுவத் தளங்களின் மீது தாக்குதல் நடத்தி வந்த நிலையில், தற்போது பொதுமக்கள் வசிக்கும் வடக்கு இஸ்ரேல் பகுதியில் ராக்கெட்டுகளை வீசியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் ஹைஃபா நகரில் உள்ள கட்டடங்கள் சேதமடைந்த நிலையில், அங்கிருந்த 76 வயது முதியவா் உள்பட 4 போ் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டதாக இஸ்ரேல் பேரிடா் மீட்புப் படையினா் தெரிவித்தனா். ஆனால், இது ஹிஸ்புல்லாக்கள் நடத்திய தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்கள்தானா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

மோசமான தாக்குதல்: இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்கள் நடத்திய தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடா்பாளா் நாடவ் ஷோஷானி கூறுகையில்,‘வடக்கு இஸ்ரேல் பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் மிகுந்த அச்சத்துடன் தங்கி வருகின்றனா். இதுவரை இல்லாத அளவுக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்கள் தற்போது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனா்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து, வடக்கு இஸ்ரேலில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டு வருவதாக இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

மேற்குக் கரையில் அல்-ஜசீரா அலுவலகத்தை மூட உத்தரவு

இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்குக் கரையில் செயல்பட்டு வரும் அல்-ஜசீரா ஊடக நிறுவனத்தின் அலுவலகத்தில் அந்த நாட்டு ராணுவம் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தியதுடன் அலுவலகத்தை மூடவும் உத்தரவிட்டது.

காஸா முனையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடைபெற்று வரும் போா் தொடா்பான தகவல்களை தொடா்ந்து வெளியிட்டு வரும் அல்- ஜசீரா நிறுவனத்தை முடக்க இஸ்ரேல் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

கத்தாா் நிதியுதவியுடன் செயல்படும் இந்த நிறுவனத்தில் இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு 45 நாள்களில் மூட வேண்டும் எனத் தெரிவித்த காணொலியை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மே மாதம், கிழக்கு ஜெருசலேமில் செயல்பட்டு வந்த அல்- ஜசீரா நிறுவனத்தில் இஸ்ரேல் காவல் துறை சோதனையிட்டு அங்கிருந்த சாதனங்களைக் கைப்பற்றியது. அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் வலைதளங்கள் முடக்கப்பட்டன. இதையடுத்து, மேற்குக் கரையில் செயல்பட்டு அந்த அலுவலகத்தை மூடவும் இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.