ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரெளடி சீசிங் ராஜா சென்னை நீலாங்கரை அருகே என்கவுன்டர் செய்யப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்ட நிலையில், தற்போது கைதான சீசிங் ராஜாவையும் காவல் துறையினர் என்கவுன்டர் செய்தனர்.
பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்ய காவல் துறையினர் அவரை அழைத்துச் சென்றபோது காவல் துறையினரைத் தாக்கித் தப்பிக்க முயன்றதாகவும், அப்போது தற்காப்புக்காக சுட்டதில் சீசிங் ராஜாவுக்கு வயிறு மற்றும் நெஞ்சுப்பகுதியில் குண்டு பாய்ந்ததாகவும் காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.
ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பரான சீசிங் ராஜா மீது 5 கொலை வழக்குகள் உள்பட 32 வழக்குகள் உள்ளன. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 29வது நபராக சீசிங் ராஜா நேற்று (செப். 22) கைது செய்யப்பட்டிருந்தார்.
ஆந்திரத்தில் கைது செய்யப்பட்ட சீசிங் ராஜாவை காவல் துறையினர் என்கவுன்டர் செய்து விடுவார்கள் என அவரது மனைவி அச்சம் தெரிவித்து நேற்று (செப். 22) விடியோ வெளியிட்டிருந்தார்.
சென்ணை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் 3வது என்கவுன்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது.