21 தலித் வீடுகளுக்கு தீ வைத்த சம்பவம் – பீகாரில் அரங்கேறிய கொடூரம்!
நவாடா மாவட்ட நில தகராறு காரணமாக 21 வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகார்
பீகார் மாநிலம், நவாடா மாவட்டம் மஞ்சி தோலாவில் 21 வீடுகள் தீ பற்றி எரிந்துகொண்டு இருப்பதாக முஃபாசில் காவல் நிலையத்துக்குத் தகவல் வந்தது. உடனடியாக தீயணைப்பு வாகனங்களுடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாகத் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மளமளவெனப் வேகமாக பரவியது. நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தீயை அணைத்தனர். இதனால் வீட்டில் உள்ள அனைத்து பொருள்களுக்கும் தீயில் கருகி நாசமாகினர். இந்த விபத்தில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட நிலத் தகராறு தான் இந்தச் சம்பவத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது .
இதனால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் மஞ்சி தோலாவில் இரவு 7.30 மணியளவில் 15 பேர்கொண்ட கும்பல் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் 21 வீடுகள் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 15 பேரை மாவட்ட காவல்துறை கைது செய்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலித் சமூகம்
இந்த நிலையில் நவாடா மாவட்டத்தில் தலித் மீதான வன்முறைச் சம்பவத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சிக்குக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
பீகாரின் நவாடாவில் உள்ள மகா தலித் காலனியில் நிகழ்த்தப்பட்ட கொடிய தாக்குதல், என்டிஏ இரட்டை என்ஜின் அரசாங்கத்தின் கீழ் காட்டாட்சி நடைபெறுகிறது என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு.
சுமார் 100 தலித் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஏழைக் குடும்பங்கள் வைத்திருந்த அனைத்தும் இரவில் கொள்ளையடிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. பிரதமர் மோடி வழக்கம் போல் மவுனம் சாதிக்கிறார்.
அதிகார பேராசையால் நிதீஷ் குமார் கவலைப்படாமல் உள்ளார். என்டிஏ கூட்டணி கட்சியினரும் வாயடைத்துப் போயுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.