திருப்பதி லட்டு விவகாரம்; தோஷம் நீங்க பக்தர்களுக்கு பரிகாரம் அறிவித்த தேவஸ்தானம்
திருப்பதி லட்டு விவகாரத்தில் தோஷம் நீங்க பக்தர்களுக்கு பரிகாரம் அறிவித்துள்ளது தேவஸ்தானம்.
திருப்பதி லட்டு
கடந்த ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்டுள்ள அனைவரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
பரிகாரம்
இதனால் ஏற்பட்டுள்ள பாவத்தை நீக்க 11 நாள் கடும் தவம் இருக்க போவதாக ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் அறிவித்துள்ளார். மேலும் கோவிலுக்கு ஏற்பட்டுள்ள தோஷத்தை போக்கை லட்டு தயாரிக்கும் இடத்தை சுத்தப்படுத்தி விட்டு, மகா சாந்தி யாகம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதால் ஏற்பட்ட தோஷம் நீங்க திருப்பதி திருமலை தேவஸ்தானம் பக்தர்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
இதன் படி “இன்று மாலை 6 மணிக்கு பக்தர்கள் வீடுகளில் விளக்கேற்றி ‘ஓம் நமோ நாராயணாய.. ஓம் நமோ பகவதே வாசுதேவாய.. ஓம் நமோ வெங்கடேசாய’ என்று மந்திரங்களை உச்சரித்து வழிபட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.