பெருந்திரளாக வெளியேறும் மக்கள்… துவம்சம் செய்யும் இஸ்ரேல்
இஸ்ரேல் குண்டுவீச்சுக்கு பயந்து ஆயிரக்கணக்கான தெற்கு லெபனான் மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி, பிரதான சாலைகளை முடக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிள்ளைகளின் எதிர்காலம்
இஸ்ரேல் தொடர்ந்து குண்டுவீச்சுகளால் மிரட்டி வருகிறது. இதனால் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி பல பெற்றோர்கள் குடும்பத்துடன் வெளியேறி வருகின்றனர். பல எண்ணிக்கையிலான கார்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்களில் தங்கள் உடமைகளுடன், குடும்ப உறுப்பினர்களுடன் புறப்பட்டு வருகின்றனர்.
இஸ்ரேல் தாக்குதலை முன்னெடுக்கத் தொடங்கியதும் தேவையான அனைத்து ஆவணங்களையும் திரட்டிக் கொண்டு வெளியேறியதாக ஒருவர் தெரிவித்துள்ளார். காஸா மீது இஸ்ரேலின் போர் தொடங்கியத்தில் இருந்தே, இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் தாக்குதலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
ஆனால் கடந்த வாரத்தில் ஹிஸ்புல்லா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது. திங்களன்று இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதலானது லெபனானின் அதிக பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரேநாளில் 492 பேர்
அத்துடன் இஸ்ரேல் அனுப்பிய குறுந்தகவல்களும் லெபனான் மக்களை பீதியில் தள்ளியது. திங்கள்கிழமை மாலை லெபனான் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், இஸ்ரேலின் குண்டுவீச்சில் ஒரேநாளில் 492 பேர் கொல்லப்பட்டதாகவும் 1,600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அறிவித்தது.
கொல்லப்பட்டவர்களில் குறைந்தது 35 குழந்தைகள் உள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, இஸ்ரேல் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,100 தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.