ஜேர்மனியில் புலம்பெயர்தலுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் வலதுசாரியினர்: புலம்பெயர்ந்தோர் கேள்வி
சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற கிழக்கு ஜேர்மன் மாகாணங்களில், தேர்தல் பிரச்சாரத்தின்போது புலம்பெயர்ந்தோருக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்தது வலதுசாரிக் கட்சி ஒன்று.
புலம்பெயர்ந்த மக்கள் எழுப்பும் கேள்வி
சமீபத்தில், ஜேர்மனியின் Thuringia, Saxony மற்றும் Brandenburg மாகாணங்களில் இடைத்தேர்தல் நடந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின்போது புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகள் கொண்ட வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD), புலம்பெயர்ந்தோருக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்தது.
Thuringiaவில், விமான இயந்திரங்கள் தயாரிக்கும் N3 Engine Overhaul Services என்னும் நிறுவனம் ஒன்று உள்ளது. அம்மாகாணத்தின் பொருளாதாரத்துக்கு உறுதுணையாக நிற்கும் அந்நிறுவனத்தில், 25 நாடுகளைச் சேர்ந்த 1,100 புலம்பெயர்ந்தோர் பணி செய்கிறார்கள்.
அத்துடன், Thuringia மாகாணத்தில் மருத்துவத் துறையில் கடும் மருத்துவர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்குள்ள மருத்துவமனைகளில் பணியாற்றும் 1,700 மருத்துவர்களில் பெரும்பாலானவர்கள் சிரியா, ரொமேனியா மற்றும் உக்ரைனிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள்.
இப்படி மருத்துவம், விமான பொறியியல் துறை, தககவல் தொழில்நுட்பம் மட்டுமில்லை, பேக்கரி முதலான தொழில்களை நடத்துபவர்களும் புலம்பெயர்ந்தோர்தான்.
இருந்தும் Alternative for Germany (AfD)கட்சி, புலம்பெயர்ந்தோருக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்தது.
அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல், அங்கு வாழும் மக்களிடையேயும் புலம்பெயர்தல் மற்றும் திறன்மிகுப்பணியாளர்கள் மீது எதிர்ப்பும் வெறுப்பும் நிலவுவது சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
ஆக, Alternative for Germany (AfD)கட்சி ஆட்சிக்கு வருமானால், தங்களுக்கு சிக்கல் என்பதை உணர்ந்துள்ள புலம்பெயர்ந்தோரில் நான்கில் ஒருவர், ஜேர்மனியை விட்டு வெளியேறுவது குறித்து தீவிரமாக யோசித்துவருகிறார்கள்.
ஜேர்மனியின் பொருளாதாரத்துக்கு உதவியாக இருந்தும் தாங்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளதால், தாங்கள் ஜேர்மனியில் இருக்கட்டுமா அல்லது வெளியேறிவிடட்டுமா என கேள்வி எழுப்புகிறார்கள் புலம்பெயர்ந்தோர்!