சர்ச்சைக்கு இடையில் திருப்பதி லட்டு அமோகமாக விற்பனை
திருப்பதி பிரசாதமான லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக தகவல் பரவிய நிலையில் லட்டு விற்பனை அமோகமாக நடைபெறுவதாக தகவல் வந்துள்ளது.
இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதனால் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டமானது மங்களகிரியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டியின் கடந்த ஆட்சியில் திருப்பதியின் புனிதத்தை கெடுத்து விட்டனர் என்றார்.
மேலும், திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிப்பில் கலப்பட பொருட்கள் பயன்படுத்தியுள்ளனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டில் மாட்டிறைச்சியின் கொழுப்பு சேர்க்கப்படுவது உறுதியான சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
பின்னர், தோஷ நிவர்த்திக்காக நேற்று முன் தினம் பரிகாரப் பூஜை செய்யப்பட்டு புனிதநீர் தெளிக்கப்பட்டது.
லட்டு விற்பனை
இந்நிலையில், திருப்பதி லட்டு குறித்து சர்ச்சை வெளிவந்தாலும் அதன் விற்பனையில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
அதாவது கடந்த 19 -ம் திகதி முதல் 22 -ம் திகதி வரையிலான நான்கு நாட்களில் மட்டும் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட லட்டுக்கள் விற்பனையாகியுள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 3 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
19 -ம் திகதியில் 3.59 லட்சம் லட்டுக்களும், 20 -ம் திகதியில் 3.17 லட்சம் லட்டுக்களும், 21 -ம் திகதியில் 3.67 லட்சம் லட்டுக்களும், 22 -ம் திகதியில் 3.60 லட்சம் லட்டுக்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், முன்பை விட லட்டின் சுவை அருமையாக உள்ளதாக பக்தர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.