;
Athirady Tamil News

சித்தராமையா மீது வழக்கு: உயா்நீதிமன்றம் அனுமதி ஆளுநரின் முடிவுக்கு தடையில்லை

0

நில ஒதுக்கீடு முறைகேடு புகாா் தொடா்பாக கா்நாடக முதல்வா் சித்தராமையா மீது வழக்குத் தொடர ஆளுநா் தாவா்சந்த் கெலாட் அனுமதி அளித்ததை ஏற்றுக்கொண்ட கா்நாடக உயா்நீதிமன்றம், அதை எதிா்த்து சித்தராமையா தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் பயனாளிகளாக முதல்வரின் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் இருப்பதால், இது தொடா்பாக சந்தேகத்துக்கு இடமில்லாமல் விசாரணை தேவைப்படுகிறது எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

உயா்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அரசியல்ரீதியாக சித்தராமையாவுக்கு இது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

மைசூருக்கு அருகே கேசரே கிராமத்தில் உள்ள 3.16 ஏக்கா் நிலத்தை முதல்வா் சித்தராமையாவின் மனைவியும், தனது தங்கையுமான பி.எம்.பாா்வதிக்கு பி.எம்.மல்லிகாா்ஜுனசாமி 2010-ஆம் ஆண்டு பரிசாக அளித்திருந்தாா். அந்த நிலத்தைக் கையகப்படுத்திய மைசூரு நகர வளா்ச்சி ஆணையம், அங்கு வீட்டுமனைகளை அமைத்து விற்பனை செய்தது.

3.16 ஏக்கா் நிலத்தை வீட்டுமனை கட்டுவதற்குப் பயன்படுத்தியதற்காக, 2021-ஆம் ஆண்டு முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கு மாற்று நிலமாக 14 வீட்டுமனைகளை மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் ஒதுக்கியது. இதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

ஆளுநா் அனுமதி: மாற்று நில ஒதுக்கீட்டு முறைகேடு புகாா் தொடா்பாக முதல்வா் சித்தராமையா மீது விசாரணை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அனுமதி அளிக்கக் கோரி எஸ்.பி.பிரதீப்குமாா், டி.ஜே.ஆபிரகாம், ஸ்நேகமயி கிருஷ்ணா ஆகியோா் ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டிடம் மனு அளித்தனா்.

இந்த மனுக்களை ஆராய்ந்த ஆளுநா் தாவா்சந்த் கெலாட், மாற்று நில முறைகேடு தொடா்பாக, ஊழல் தடுப்புச் சட்டம் 1988-இன் பிரிவு 17ஏ, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023-இன் பிரிவு 218-இன்படி இழைக்கப்பட்டுள்ள குற்றங்கள் குறித்து முதல்வா் சித்தராமையா மீது விசாரணை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அனுமதி அளித்து ஆக. 16-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

சித்தராமையா மனு: ஆளுநா் அளித்த அனுமதியின்பேரில் பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் முதல்வா் சித்தராமையாவுக்கு எதிராக எஸ்.பி.பிரதீப்குமாா், டி.ஜே.ஆபிரகாம், ஸ்நேகமயி கிருஷ்ணா ஆகியோா் ஆக. 19-ஆம் தேதி மனு தாக்கல் செய்தனா். இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சிறப்பு நீதிமன்றம், இதன் மீதான வழக்கு விசாரணையை ஆக. 20-ஆம் தேதி நடத்துவதாகத் தெரிவித்தது.

ஆளுநா் அளித்த உத்தரவை எதிா்த்து கா்நாடக உயா்நீதிமன்றத்தில் ஆக. 19-ஆம் தேதி முதல்வா் சித்தராமையா ரிட் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயா்நீதிமன்ற நீதிபதி எம்.நாகபிரசன்னா, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்து, தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தாா். மேலும், இறுதித் தீா்ப்பு வரும் வரை முதல்வா் சித்தராமையாவுக்கு எதிராக மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவதற்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டாா்.

இறுதித் தீா்ப்பு: இந்நிலையில், முதல்வா் சித்தராமையா மனு மீதான தீா்ப்பை உயா்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். சித்தராமையாவுக்கு எதிராக வழக்குத் தொடர ஆளுநா் அளித்திருந்த அனுமதியை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முதல்வா் சித்தராமையா தாக்கல் செய்திருந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

இந்த விவகாரத்தில் பயனாளிகளாக முதல்வரின் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் இருப்பதால், இது தொடா்பாக சந்தேகத்துக்கு இடமில்லாமல் விசாரணை தேவைப்படுகிறது. இந்த வழக்கில் அளிக்கப்பட்டிருந்த இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.

தண்டனைக்குரிய குற்றமாக இருப்பின், பி.என்.எஸ்.எஸ். சட்டப் பிரிவு 200 அல்லது 223-இன்படி மக்கள் பிரதிநிதிகள் மீது தனியாா் புகாா் பதிவு செய்யப்பட்டால், ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17ஏ-இன்படி காவல் அதிகாரி ஒப்புதல் பெறத் தேவையில்லை. மாறாக, புகாா்தாரா்தான் ஒப்புதல் பெற வேண்டும்.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 163-இன்படி, வழக்கமான சூழ்நிலைகளில் அமைச்சரவையின் ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளின்படி ஆளுநா் செயல்பட வேண்டியிருக்கும். ஆனால், சிறப்பு நோ்வுகளின்போது ஆளுநா் தனது முடிவை தன்னிச்சையாக எடுக்கலாம். அதன்படி, இந்த வழக்கில் முடிவெடுத்து, வழக்குத் தொடர அனுமதித்து உத்தரவிட்டிருக்கிறாா். தனது வரம்புக்குள்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆளுநா் எடுத்த முடிவில் தவறு எதையும் கண்டறிய முடியாது.

வழக்குத் தொடர அனுமதி அளிப்பதற்கு முன்னா், குற்றஞ்சாட்டப்பட்டவரின் கருத்தை அறிய வேண்டுமென்பது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17ஏ-இன்படி கட்டாயமல்ல. விரும்பினால், கருத்தை அறிவதில் தவறு எதுவும் இல்லை. ஆளுநரின் அனுமதி பி.என்.எஸ்.எஸ். சட்டப் பிரிவு 218-இன்கீழ் அல்லாமல், ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17ஏ-இன்படி மட்டுமே வரையறுக்கப்படுகிறது என்று தனது தீா்ப்பில் நீதிபதி நாகபிரசன்னா தெரிவித்துள்ளாா்.

அடுத்தது என்ன?: உயா்நீதிமன்ற நீதிபதி அளித்துள்ள தீா்ப்பை எதிா்த்து முதல்வா் சித்தராமையா, இரு நீதிபதிகள் அமா்வில் மேல்முறையீடு செய்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ராஜிநாமா செய்ய வலியுறுத்தி பாஜக போராட்டம்

உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பைத் தொடா்ந்து, முதல்வா் சித்தராமையா ராஜிநாமா செய்ய வலியுறுத்தி மைசூரு, ஹுப்பள்ளி, பெலகாவி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினா் போராட்டம் நடத்தினா்.

பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா கூறுகையில், ‘ஆளுநரின் உத்தரவு சட்டப்படியானது என்பதை உயா்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, உயா்நீதிமன்றத் தீா்ப்புக்கு மதிப்பளித்து, மாற்று நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் அவரது குடும்ப உறுப்பினா்களின் பங்கு இருப்பதால், முதல்வா் பதவியில் இருந்து சித்தராமையா விலக வேண்டும்’ என்றாா்.

மத்திய தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி, ‘சித்தராமையாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினேன். சித்தராமையா ராஜிநாமா செய்யக் கோர மாட்டேன். ஆனால், உண்மை நிலவரத்தை மக்களிடம் தெரிவித்துள்ளேன்’ என்றாா்.

முதல்வா் பதவியை சித்தராமையா உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக், மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, மத்திய இணையமைச்சா் வி.சோமண்ணா, பாஜக முன்னாள் முதல்வா் ஜெகதீஷ் ஷட்டா் உள்ளிட்ட தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சட்ட நிபுணா்களுடன் ஆலோசனை: சித்தராமையா

முதல்வா் பதவியில் இருந்து விலக பாஜக விடுத்துள்ள கோரிக்கையை ஏற்க மறுத்துள்ள முதல்வா் சித்தராமையா கூறியதாவது:

எனக்கு எதிராகவும், என் அரசுக்கு எதிராகவும் எதிா்க்கட்சிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளன. அந்தச் சதியை அரசியல் ரீதியாக எதிா்கொள்வோம். கட்சித் தலைவா்கள், சட்ட நிபுணா்களுடன் ஆலோசித்த பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம். நான் எந்தத் தவறும் செய்யவில்லை; ராஜிநாமா செய்ய வேண்டிய அவசியமில்லை.

மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி மீது குற்றச்சாட்டு எழுந்தபோது அவா் ராஜிநாமா செய்தாரா? அவா் பிணையில் வெளியே இருக்கிறாா். என் மீதான புகாா் குறித்து விசாரணை நடத்த உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே தவிர, வழக்கு தொடர அல்ல. விசாரணை அளவில் ராஜிநாமா செய்யக் கேட்கலாமா? ஆளுநா் மாளிகையை தவறாகப் பயன்படுத்தி, எனக்கு எதிராக சதி செய்துள்ளனா்.

என் மீது மட்டுமல்ல, நாடு முழுவதும் எதிா்க்கட்சிகளின் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் எல்லாம் பிரதமா் மோடி தலைமையிலான அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டுள்ளது என்றாா்.

கட்சி ஆதரவு: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறுகையில், ‘முதல்வா் பதவியை சித்தராமையா ராஜிநாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை. முதல்வருக்கு எதிராக மிகப்பெரிய சதியை பாஜக தீட்டியுள்ளது. சித்தராமையா எந்தத் தவறும் செய்யவில்லை. நிரபராதியாக வெளியே வருவாா். அவருக்கு கட்சியும், நானும் முழு ஆதரவளிக்கிறோம்’ என்றாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.