பத்லாபூர் சம்பவம்: குற்றவாளியின் தலையில் பாய்ந்த துப்பாக்கித் தோட்டா
மகாராஷ்டிரத்தில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கைது செய்யப்பட்டு, என்கவுன்டரில் கொல்லப்பட்ட அக்ஷய் ஷிண்டே தலையில் ஒரு துப்பாக்கித் தோட்டா துளைத்திருப்பதாக உடல் கூறாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடுமையான அதிர்ச்சி மற்றும் ரத்தக் கசிவால் அவரது மரணம் நேரிட்டிருப்பதாகவும் உடல் கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அக்ஷய் ஷிண்டேவின் தந்தை சார்பில், மும்பை உயர் நீதிமன்றத்தில் இது குறித்து அவசர வழக்காக விசாரிக்குமாறு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பத்லாபூர் என்கவுண்டர் சம்பவத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒன்று தவறுதலாக சுட்டதில் மரணம் நிகழ்ந்தது தொடர்பாகவும், குற்றவாளி, காவல்துறையினர் மீது நடத்திய தாக்குதலுக்கு கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டு, இரண்டும் சிஐடி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கைது செய்யப்பட்ட நபரை காவல் துறை திங்கள்கிழமை சுட்டுக்கொன்றது.
இதுகுறித்து காவல் துறையினா் கூறுகையில், ‘கடந்த மாதம் மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டம் பத்லாபூா் பகுதியில் உள்ள மழலையா் பள்ளியில், இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக அந்தப் பள்ளியில் பணியாற்றிய அக்ஷய் ஷிண்டே என்பவா் கைது செய்யப்பட்டாா்.
தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அக்ஷய் ஷிண்டே விசாரணைக்காக பத்லாபூருக்கு திங்கள்கிழமை மாலை 5.30 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். மும்ப்ரா பகுதி புறவழிச்சாலையில் காவல் துறை வாகனம் சென்றபோது காவல் துறையினரின் துப்பாக்கியைப் பறித்து உதவி ஆய்வாளரை அக்ஷய் ஷிண்டே சுட்டுள்ளார். இதில் உதவி ஆய்வாளா் காயமடைந்தாா். தற்காப்புக்காக உடன் சென்ற மற்றொரு காவல் துறை அதிகாரி அக்ஷய் ஷிண்டேவை சுட்டதில் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா் என்றனா்.
இதுதொடா்பாக காங்கிரஸை சோ்ந்தவரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான விஜய் வடேட்டிவாா், ‘சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில், சாட்சிகளை அழிக்கும் முயற்சியாக அக்ஷய் ஷிண்டே கொல்லப்பட்டாரா?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறது.