ஜேர்மனிக்குள் கடத்திவரப்பட்ட புலம்பெயர்ந்தோர்… ரெய்டில் இறங்கிய 400 அதிகாரிகள்
ஜேர்மனிக்குள், சட்டவிரோதமாக, குறைந்த வருவாயில் வேலை செய்வதற்காக புலம்பெயர்ந்தோர் கடத்திவரப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
விடயம் வெளியானது எப்படி?
ஜேர்மனிக்குள் சட்டவிரோதமாக, குறைந்த வருவாயில் வேலை செய்வதற்காக ஒரு கூட்டம் புலம்பெயர்ந்தோர் கடத்திவரப்பட்டதாக தகவல் கிடைத்ததன் பேரில், ஜனவரி மாதமே விசாரணை ஒன்று துவக்கப்பட்டது.
இந்நிலையில், ஜூன் மாதம், அந்த புலம்பெயர்ந்தோரில் ஒருவர் பிராங்பர்ட் விமான நிலையம் வழியாக ஜேர்மனியை விட்டு தப்ப முயன்றபோது அதிகாரிகளிடம் சிக்கினார்.
விசாரணையில், அவர் பணி அனுமதியின்றி ஜேர்மனியில் வேலை செய்துவந்தது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து Stuttgart விமான நிலையத்தில் ஒருவரும், பிராங்பர்ட் விமான நிலையத்தில் மீண்டும் ஒருவரும் சிக்கவே, பொலிசாருக்கு கடத்தல் தொடர்பில் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
ரெய்டில் இறங்கிய 400 அதிகாரிகள்
அதைத் தொடர்ந்து, செவ்வாயன்று, தென்மேற்கு ஜேர்மனியில் 400 அதிகாரிகள் ரெய்டுகளில் இறங்கினார்கள்.
பெடரல் பொலிசார், அரசு சட்டத்தரணி அலுவலகம் மற்றும் சுங்க அதிகாரிகள் இணைந்து 24 இடங்களில் ரெய்டுகள் மேற்கொண்டார்கள்.
ரெய்டுகளின் தொடர்ச்சியாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
என்றாலும் ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய ஏழு பேர் கொண்ட குழு ஒன்று விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதால் கைது எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.