பழைய முறைக்கு திரும்பிய இலங்கை விசா வழங்கும் முறை!
இலங்கையின் புதிய அரசாங்கம், நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில், முந்தைய விசா வழங்கும் முறையை உத்தியோகபூர்வமாக மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, நேற்று (26) நள்ளிரவு முதல் அனைத்து வெளிநாட்டவர்களும் முந்தைய முறையின் கீழ் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
விசா வசதியை VFS குளோபல் நிர்வகிக்கும் போது பலர் சிரமங்களை எதிர்கொண்டனர். இலங்கைக்கு பயணம் செய்யும் வெளிநாட்டவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டதால், இந்த விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டது. 24 மணி நேரத்திற்குள், பழைய முறைக்கு மாற்றுவதற்கான நீதிமன்ற உத்தரவை அரசாங்கம் அமல்படுத்தியது என அவர் கூறியுள்ளார்.
அதன்படி, நேற்று நள்ளிரவு முதல், அனைத்து வெளிநாட்டவர்களும் மீண்டும் நிறுவப்பட்ட முறையின் கீழ் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும் என்பது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.