;
Athirady Tamil News

மீண்டும் இயங்குகிறது யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைக் கூடம்

0

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைக் கூடம் நேற்று(27) முதல் இயங்க ஆரம்பித்துள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக சத்திரசிகிச்சைக் கூடக் கட்டிடம் மற்றும் விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக் கட்டிடம் ஆகியன நிர்மாணிக்கப்பட்ட போதிலும் ஆளணிப் பற்றாக்குறை,வளப்பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வருடக் கணக்கில் சத்திர சிகிச்சைக் கூடத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் அண்மையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம் பூதாகரமாக வெடித்திருந்த நிலையில் புதிய வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ரஜீவ் சத்திர சிகிச்சைப் பிரிவை இயக்க நடவடிக்கை எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

சத்திர சிகிச்சை நிபுணர் பேராசிரியர் ரவிராஜ், மகப்பேற்று நிபுணர் சிறீசுபாஸ்கரன் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் சத்திரசிகிச்சைக் கூடத்தை வெற்றிகரமாக ஆரம்பித்து வைத்துள்ளனர்.

ஆரம்ப தினத்தில் கேர்னியா நோயாளிக்கான சத்திரகிகிச்சை,இரு சிசேரியன் சத்திர சிகிச்சைகள், மேலும் நான்கு சிறிய சத்திர சிகிச்சைகள் ஆகியன வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டதன் பயனாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக நோயாளர்களை அனுப்பும் நிலைமை வெகுவாகக் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.