விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸை மீட்கச் செல்லும் டிராகன் விண்கலம்!
ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு விண்வெளி மையத்தில் தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரை மீட்க டிராகன் விண்கலத்தை நாசா விண்ணில் ஏவுகிறது.
அமெரிக்காவின் தனியாா் நிறுவனமான போயிங் உருவாக்கியுள்ள ஸ்டாா்லைனா் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் 5 ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர்.
ஜூன் 14 ஆம் தேதி அவர்கள் திரும்பவிருந்த நிலையில், ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருவரும் அங்கேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கும் மேலாக அவர்கள் விண்வெளியில் இருக்கின்றனர். அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தான் அவர்கள் பூமிக்குத் திரும்புவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் அவர்களை மீட்டுவர விண்கலம் இன்று புறப்பட இருக்கிறது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் க்ரூ – 9 எனப்படும் திட்டத்தின்படி 2 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பவுள்ளனர். இந்த விண்கலம் ஃப்ளோரிடாவிலுள்ள ஏவுதளத்திலிருந்து சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்திய நேரப்படி இன்று இரவு 10.47 மணிக்கு விண்கலம் ஏவப்படுகிறது.
இந்த விண்கலத்தில் நாசாவை சேர்ந்த வீரர் நிக் ஹாக்வே மற்றும் ரஷ்ய வீரர் அலெக்ஸாண்டர் கோர்பனோவ் ஆகியோர் பயணிக்க உள்ளனர். இவர்கள் ஐந்து மாதங்கள் ஆராய்ச்சிப் பணிக்காக விண்வெளியில் தங்கியிருந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வர உள்ளனர்.
முன்னதாக க்ரூ 9 விண்கலம் கடந்த வியாழன் (செப். 26) அன்று ஏவப்பட இருந்தது. ஆனால், ஹெலன் புயல் காரணமாக இன்று ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
கடந்த 2020 ஆம் ஆண்டு சோதனை ஓட்டத்திற்குப் பிறகு டிராகன் விண்கலம் மூலம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இரு விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்புகிறது.