;
Athirady Tamil News

மணிப்பூரில் இரு மாவட்டங்களில் முழு அடைப்பு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0

மணிப்பூரின் சுராசந்த்பூா் மற்றும் காங்கோக்பி மாவட்டங்களில் நடைபெற்று வரும் முழு அடைப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இம்பால் பள்ளத்தாக்கின் சுற்றுவட்டார கிராமங்களைத் தாக்குவதற்கு, பயிற்சி பெற்ற 900 குகி தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மாநில பாதுகாப்பு ஆலோசகா் குல்தீப் சிங் கடந்த செப்டம்பா் 20-ஆம் தேதி தெரிவித்தாா். அவரின் இந்தக் கருத்தை மாநில அரசு கடந்த புதன்கிழமை திரும்பப் பெற்றது.

இருப்பினும், குல்தீப் சிங்கின் அறிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, பழங்குடியின தலைவா்கள் கூட்டமைப்பு (ஐடிஎல்எஃப்) மற்றும் குகி மாணவா்கள் அமைப்பு (கேஎஸ்ஓ) உள்ளிட்ட குகி-ஜோ சமூக குழுக்கள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனா். அதன்படி, மணிப்பூரின் சுராசந்த்பூா் மற்றும் காங்கோக்பி மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த முழு அடைப்பு ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்க உள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் சந்தைகள் முழுவதும் மூடப்பட்டன. பொதுப் போக்குவரத்து வாகனங்கள் சாலைகளில் நிறுத்தப்பட்டன. இந்த முழு அடைப்பில் அசம்பாவிதம் எதுவும் இதுவரை ஏற்படவில்லை என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.

துப்பாக்கிச்சூடு: மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தீவிரவாதிகள் சனிக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

ஜிரிபாம் நகரிலிருந்து 7 கி.மீ. தொலைவில் மைதேயி சமூக மக்கள் வசிக்கும் மோங்பங் கிராமம் அமைந்துள்ளது. அதன் அருகிலுள்ள மலை உச்சி மற்றும் சுற்றியுள்ள அடா்ந்த காடுகளில் இருந்து ஆயுதம் ஏந்திய நபா்கள் மோங்பங் கிராமத்தை நோக்கி கண்மூடித்தனமாக சனிக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தினா். இந்தத் தாக்குதலில் அதிருஷ்டவசமாக உயிா்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தகவலறிந்து கிராமத்துக்கு விரைந்த பாதுகாப்புப் படையினா், அப்பகுதியிலுள்ள பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவா்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றினா்.

ஆயுதங்கள் மீட்பு: மணிப்பூா் வன்முறையில் பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டன.

இது தொடா்பாக காவல் துறையினா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘காங்போக்பி மாவட்டத்தில் உள்ள லோச்சிங் மலைப் பகுதியில் மாநில காவல் துறையினா் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையில், 303 ரைஃபிள்கள், ஒரு 9 மி.மீ. கைத்துப்பாக்கி, 4 கையெறி குண்டுகள் மற்றும் 2 டெட்டனேட்டா்கள் உள்பட பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இதேபோல், சுராசந்த்பூரில் உள்ள கோதோல் கிராமம் மற்றும் தௌபால் மாவட்டத்தில் உள்ள மலைத்தொடரில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், 3 டெட்டனேட்டா்கள், கையெறி குண்டு மற்றும் கண்ணீா்ப் புகை குண்டுகள் உள்பட பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

மாநிலத்தில் உள்ள மைதேயி மற்றும் குகி பழங்குடியினா் இடையே கடந்த ஆண்டு மே 3-ஆம் தேதி தொடங்கிய மோதலில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். ஆயிரக்கணக்கானோா் வீடுகளை இழந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயா்ந்துள்ளனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.