ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் நிரந்தர இடத்துக்கு ரஷ்யா ஆதரவு
ஐக்கிய நாடுகள் அமைப்பின் (UNSC) பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெற வேண்டும் என்கிற இந்தியாவின் நீண்ட நாள் கோரிக்கைக்கு முக்கியமான ஆதரவாக, ரஷ்யா அதன் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.
முன்னதாக பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ், பூடான், போர்ச்சுகல், சிலி உட்பட பல்வேறு நாடுகளின் ஆதரவளித்த தொடர்ந்து, ரஷ்யா இப்பொது அதன் ஆதரவை தெரிவித்துள்ளது.
ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றிய ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், “நியாயமான உலக ஒழுங்கை உருவாக்கும் விவாதங்களில், உலகின் தெற்கு நாடுகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும், பிரேசில் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் நிலைப்பாட்டையும் ஆப்ரிக்க ஒன்றியத்தின் அறியப்பட்ட முன்மொழிவுகளையும் ஆதரிக்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.
முந்தைய வாரங்களில், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பாதுகாப்பு கவுன்சில் மாற்றங்களை பரிந்துரைத்து, ஆப்ரிக்க நாடுகளுக்கு நிரந்தர பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
மேலும், பிரேசில், இந்தியா, ஜப்பான் மற்றும் ஜேர்மனிக்கான நிரந்தர இடங்களையும் அவர் பரிந்துரைத்தார்.
இந்தியா நீண்டகாலமாக பாதுகாப்பு கவுன்சில் மறுசீரமைப்பிற்கான வலியுறுத்தல்களை செய்து வருகின்றது.
இதற்காக இந்தியாவின் ஐ.நா. நிரந்தர பிரதிநிதி ருசிரா காம்போஜ், கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களின் ஆதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளார். அவ்வாதிக்கம் இன்றைய அரசியல் சூழலுக்கு பொருத்தமாக இல்லை என்பதையும், உலகின் பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய ஒரு சமமான மற்றும் நியாயமான ஆளுமை அமைப்பு தேவைப்படுகிறதென்றும் அவர் தெரிவித்தார்.
ரஷ்யாவின் ஆதரவு, இந்தியாவின் UNSC நிரந்தர இடத்தைப் பெறும் சாத்தியங்களை மேலும் வலுப்படுத்துகிறது.
இருப்பினும், இந்த மாற்றம் எளிதாக ஏற்படாது, ஏனெனில் இதற்கு ஐ.நா. உறுப்பினர்களின் ஒருமித்த ஒப்புதல் தேவைப்படுகிறது.
உலக சமுதாயம் முக்கிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், பாதுகாப்பு கவுன்சிலின் மாற்றங்களுக்கான அழுத்தம் மேலும் அதிகரிக்கக் கூடும்.