ஜனாதிபதியிடம் 08 கோரிக்கைகளை முன் வைத்துள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பினர்
ஜனாதிபதியிடம் 08 கோரிக்கைகளை கடிதம் மூலம் குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் முன் வைத்துள்ளனர்.
ஜனாதிபதிக்கு அவர்கள் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கைத் தீவில் நடைபெற்று முடிந்துள்ள ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் முடிவானது, மரபு கடந்த ஒரு ஆட்சிக்கு வித்திட்டுள்ளது. இது ஒட்டுமொத்த இலங்கை வாழ் மக்களினதும் துணிகரமான தீர்மானம் ஆகும்.
அந்த வகையில், ஊழலற்ற ஒரு தேசத்தை உலகிற்கு அறிமுகப்படுத்துகின்ற முகவரியோடு நாட்டின் ஆட்சிப் பொறுப்பை கையேற்றிருகின்ற கௌரவ ஜனாதிபதியாகிய தங்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்து வரவேற்றுக் கொள்கின்றோம்!
மக்களதிகாரத்தின் ஊடாக ஆணைபெற்று அரச தலைவராக பதவியேற்றிருக்கின்ற தங்களுக்கு, சமூக பொருளாதார ரீதியில் சிதைவடைந்துள்ள இந்நாட்டை துரிதமாக சீரமைக்கும் தலையாய கடமைப் பொறுப்பு இருப்பதை தாங்கள் நன்கறிவீர்கள்.
இந்த நாடு இந்நிலையை சந்திப்பதற்கு அடிப்படை காரணமாக அமைவது, நாட்டில் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினையும் அதனுடான யுத்தமும்தான். இவற்றுக்கான, காரணகாரியங்களை கண்டறிந்து நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பட்சத்தில், இந்நாட்டின் மீதான இதர தலையீடுகளை இல்லாது செய்து தேசத்தை அபிவிருத்தி நோக்கி கட்டியெழுப்ப முடியும். அதுவே காலத்தின் தேவையும் கூட.
அந்த வகையில், பல்லின கலாச்சார பண்பாடுகளைக் கொண்ட மக்கள் வாழ்கின்ற இந்நாட்டில்,
ஒரு பூர்வீக இனமான தமிழ் மக்கள் தமது தாய் நிலத்தில் சம உரிமையுடனும் சமூக அந்தஸ்துடனும் வாழ்வதற்காக தசாப்தங்கள் பல கடந்தும் இன்றுவரை போராடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது தாங்கள் அறிந்த விடயமே.
ஆண்டாண்டு காலங்களாக அதிகாரக் கதிரையேறும் எந்த ஒரு அரச தலைவரும், தமிழ் மக்கள் தமது நியாயமான வாழ்வுரிமைகளை முழுமையாக அனுபவிப்பதற்கு வழிவகுத்ததில்லை. மாறாக, எமது கோரிக்கைகளை பிரிவினை வாதமாகவும் பயங்கரவாதமாகவும் சித்தரித்து சகோதர சிங்கள மக்கள் மத்தியில் இனவெறுப்பினை தோற்றுவித்ததுடன், அதிகார பலம் கொண்டு தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆட்சி புரிந்து தத்தமது சுயலாபத்தை அனுபவித்துக் கொண்டதே இதுநாள் வரலாறாக இருந்து வருகிறது.
இதனால்தான் ஒட்டுமொத்த நாடும் அழிவுப் பாதைக்குள் அமிழ்ந்து போனது. எனினும், தமிழ் மக்கள் மீள் நிரப்ப முடியாத பல்வேறு பேரழிவுகளுக்கு ஆளானவர்களாக இன்றுவரை அடையாளப்பட்டு நிற்கிறார்கள்.
எனவே, மாற்றத்தின் ஊடாக நாட்டை முன்னேற்றும் ஒரு கதாநாயகனாக ஆட்சிப் பொறுப்பேற்றிருருக்கும் ஜனாதிபதியாகிய தாங்கள், தமிழ் மக்களது gpur;rpidfis ஆராய்ந்து நிரந்தரமானதொரு அரசியல் தீர்வுக்கு வழி வகுப்பீர்கள் என நம்பிக்கை கொள்கின்றோம். அதன் அடிப்படையில்;
1 > தமக்கென நிலம், மொழி, கலாச்சாரம், பண்பாடு எனும் தனித்துவ அடையாளங்களுடன் கூடிய ஒரு பூர்வீக இன மக்கள் என்ற வகையில், தமிழ் மக்கள் தமது தாயக பிரதேசங்களில் தன்னடையாளங்களுடன் சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் வாழக்கூடிய ஏதுச் சூழலை உறுதிப்படுத்த வேண்டும்.
2 > தனிமனித உரிமைகளை தடுத்தாழ்கின்ற வகையில் செரிவூட்டப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக அகற்றப்பட வேண்டும்.
3 > தமிழ் சமூகத்தின் பெயரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், ஏதேனுமொரு பொறிமுறையூடாக காலதாமதமின்றி விடுதலை செய்யப்பட வேண்டும்.
4 > தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட போரின் பங்காளிகளாக இருந்து புனர்வாழ்வு என்ற பெயரில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் உட்பட, சிறைகளிலிருந்து விடுதலையான தமிழ் அரசியல் கைதிகளின் வாழ்வாதாரம் அவர்களின் உடல் உள மேம்பாடுகள் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
5 > போரின் பெயரில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் கதி அறியாது பல வருடங்களாக தெருப்போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கின்ற தாய்மார்களின் கண்ணீருக்கு காலம் தாழ்த்தாது நியாயமான நிரந்தர தீர்வை தர வேண்டும்.
6 > போரின் பெயரில் உயிர்நீத்த உறவுகளை நினைவேந்துகின்ற அடிப்படை மனிதநேய உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதன் ஊடாக, மனக்காயங்களுக்கு ஆளாகியிருக்கின்ற மக்களை உள ரீதியாக ஆற்றுப்படுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
7 > தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் தமிழர் வாழ் பிரதேசங்களில் மாத்திரம் அளவுக்கதிகமாக குவிக்கப்பட்டுள்ள ராணுவப் படைகளின் எண்ணிக்கை தொடரில் மக்களுக்கு எழுந்துள்ள அச்ச நிலையை போக்குவது அவசியமாகிறது.
8 > தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாகவும் ஏனைய அரச திணைக்களங்கள் ஊடாகவும் தமிழ் மக்களின் இனச் செரிவை குன்றச் செய்கின்ற வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காணிஅபகரிப்புகள் மற்றும் தமிழர் பிரதேசங்களின் பெயர்களை சிங்களப் பெயர்களில் மாற்றுகின்ற சூட்சும செயற்பாடுகள் கைவிடப்பட வேண்டும்.
இதுபோன்ற நிஜ மாற்றங்களால் மாத்திரமே இலங்கையில் இன ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்பதையும், அதுவே இந்நாட்டை மதிக்கத்தக முன்னேற்றத்திற்கு இட்டுச்செல்லும் என்பதையும் ஒரு சிவில் சமூக அமைப்பாக நினைவுபடுத்த கடமைப்படுகிறோம் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.