துணை முதல்வர் உதயநிதி! இன்று பொறுப்பேற்பு, செந்தில் பாலாஜியும் அமைச்சராகிறார்
தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் இன்று(செப். 29) பொறுப்பேற்கிறார்.
உதயநிதி துணை முதல்வராவதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்த நிலையில் அவர் பொறுப்பேற்க உள்ளார்.
மேலும், சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்கவுள்ளார்.
புதிய அமைச்சர்கள்
முன்னாள் அமைச்சர்கள் எஸ்.எம். நாசர் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோரையும் புதிதாக ஆர். ராஜேந்திரன், கோ.வி. செழியன் ஆகியோரையும் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 3.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்.
மேலும், புதிதாக அமைச்சர்களாக பதவியேற்க உள்ளவர்களின் துறை விவரங்களை தமிழக அரசு வெளியிடவில்லை.
துறை மாற்றம்
உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மெய்யநாதன், கயல்விழி ஆகியோரின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
ராஜகண்ணப்பனுக்கு பால் வளத்துறையும், தங்கம் தென்னரசுக்கு நிதித்துறையுடன் சுற்றுச்சூழல் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் நீக்கம்
செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
5-ஆவது முறை
கடந்த 2021ஆம் ஆண்டு திமுக அரசு அமைந்த பிறகு, 5-ஆவது முறையாக அமைச்சரவை மாற்றம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.