லட்டில் கலப்படம் செய்யப்பட்டதற்கு உறுதியான ஆதாரம் இல்லை – உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்ட லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
திருப்பதி லட்டு
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க 11 நாள் கடும் தவம் இருக்கப்போவதாக ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் அறிவித்தார். மேலும் தேவஸ்தானம் சார்பில் கோயிலில் தீட்டு கழிப்பதற்காக பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன.
ஜெகன் மோகன் மறுப்பு
இந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும், அரசியலுக்காக சந்திரபாபு நாயுடு இப்படி பேசி வருகிறார் என ஜெகன் மோகன் ரெட்டி இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பியும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவருமான சுப்பா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று இந்த மனுக்களை விசாரித்தது. விசாரணையில் உச்சநீதிமன்றம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றம் கேள்வி
ஜூலை மாதம் ஆய்வறிக்கை வெளியான நிலையில் அதை தற்போது வெளியிட்டது ஏன்? விலங்கு கொழுப்பு கலந்த கலப்பட நெய் தான் திருப்பதியில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டது என்பதற்கு எந்த தெளிவான தரவுகளும் இல்லை. முழுமையாக அறிக்கை எதுவும் இல்லாத நிலையில் இவ்வளவு அவசரமாக இந்த செய்தியை வெளியிட்ட காரணம் என்ன?
உச்சநீதிமன்றம்
சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்துள்ள மாநில அரசு அதன் அறிக்கை வரும் முன் ஊடகங்களில் இதை பற்றி பேசியது ஏன்? அரசியலமைப்பு பதவியில் இருக்கும் ஆந்திர மாநில முதலமைச்சர் கடவுளை வைத்து அரசியல் செய்யக்கூடாது. முதல்வர் சந்திரபாபு நாயுடு மத உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.