இரவில் ஆட்டோ பயணம்.., பெண்கள் பாதுகாப்பை அறிய பெண் காவல் அதிகாரியின் புதிய முயற்சி
இரவு நேரங்களில் பெண்களின் பாதுகாப்பை அறிந்து கொள்ள பெண் காவல் அதிகாரி ஒருவர் சுற்றுலா பயணி போல ஆட்டோவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆட்டோ பயணம்
தற்போதைய காலங்களில் பெண்களின் பாதுகாப்பு குறைந்து விட்டது என்று ஆங்காங்கே நடைபெறும் சம்பவங்கள் வாயிலாக தெரியவருகிறது. அதுவும் வட மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்பு சற்று குறைவு என்றே சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இரவு நேரங்களில் பெண்களின் பாதுகாப்பை அறிந்து கொள்ள பெண் காவல் அதிகாரி ஒருவர் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
ஆக்ராவை சேர்ந்த பெண் காவல் உதவி ஆணையர் (ACP) சுகன்யா ஷர்மா (33). இவர், பெண்களின் பாதுகாப்பை பரிசோதிப்பதற்காக ஆக்ராவில் சாதாரண உடை அணிந்து, சுற்றுலாப் பயணி போல ஆட்டோவில் தனியாக பயணம் செய்தார்.
அப்போது ஆட்டோ ஓட்டுநரிடம் பெண்களின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்று கேள்வி கேட்டு தகவலை சேகரித்து கொண்டார். பின்னர், ஆக்ரா கான்ட் ரயில்வே ஸ்டேஷன் வாசலில் ஆட்டோவில் இறங்கினார்.
அங்கிருந்து, சுற்றுலாப் பயணியாக மாறி, உதவிக்கு காவல்துறையை அழைத்தார். இரவு வெகுநேரமாகிவிட்டதாலும், வெறிச்சோடிய சாலையால் தான் பயப்படுவதாகவும் காவல்துறையினரிடம் உதவி தேவைப்படுவதாகவும் கூறினார்.
அப்போது அவரிடம் பேசிய ஹெல்ப்லைன் ஆப்ரேட்டர், அவரைப் பாதுகாப்பான இடத்தில் இருக்க சொல்லிவிட்டு நின்றுகொண்டிருக்கும் இடத்தை பற்றிய தகவல்களை பெற்றுக் கொண்டார்.
பின்பு, பெண்கள் ரோந்து குழுவில் இருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது. அப்போது அவர்கள், தாங்கள் உங்களை அழைத்துச் செல்ல வருவதாக கூறினர்.
இதையடுத்து அவர்களிடம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சுகன்யா, அவசரகால சேவை அமைப்பை சோதனை செய்யவே இவ்வாறு செய்ததாகவும், அதில் நீங்கள் தேர்ச்சி பெற்று விட்டீர்கள் என்றும் கூறியுள்ளார்.