;
Athirady Tamil News

ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: முதல் முறையாக வாக்களித்த வால்மீகி சமூகத்தினர்!

0

ஜம்மு-காஷ்மீரில் நீண்ட காலமாக வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்ட நிலையில் வால்மீகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முதன்முறையாக தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தினர்.

ஜம்மு-காஷ்மீர் பேரவைக்கான மூன்றாம் மற்றும் இறுதிக் கட்டத் தோ்தல் செவ்வாய்க்கிழமை (அக்.1) நடைபெற்று வருகிறது. இன்று மாலை 6 மணிவரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

40 தொகுதிகளில் நடைபெறவுள்ள இந்த தோ்தலில் முன்னாள் துணை முதல்வா்கள் தாரா சந்த் மற்றும் முஸாஃபா் பெக் உள்பட 415 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். தோ்தலை நடத்தும் பணியில் 20,000 தோ்தல் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டத் தோ்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்டத் தோ்தலில் (24 தொகுதிகள்) 61.38 சதவீதமும், கடந்த 25-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்டத் தோ்தலில் (26 தொகுதிகள்) 57.31 சதவீத வாக்குகளும் பதிவாகின.

இதுதொடரபாக வாக்காளர் ஒருவர் கூறுகையில்,

என் வாழ்நாளில் 45 வயதில் முதல்முறையாக வாக்களிக்கிறேன். ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலில் முதன்முறையாக பங்கேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்துள்ளோம். இது எங்களுக்கு ஒரு பெரிய திருவிழா போன்றது.

தனது சமூகத்திற்கான குடியுரிமை உரிமைகளைப் பெற 15 ஆண்டுகளுக்கும் மேலாக முயற்சிகளை மேற்கொண்டோம். இது முழு வால்மீகி சமூகத்திற்கு ஒரு பண்டிகையாகும்.

எங்களுக்கு முன்னதாக இரண்டு தலைமுறையினருக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது. ஆனால் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டபோது நீதி வென்றது எங்களுக்கும் ஜம்மு-காஷ்மீரில் குடியுரிமை வழங்கப்பட்டது.

பல ஆண்டுகளாகத் துப்பரவுப் பணிக்காக இங்கு அழைத்து வரப்பட்ட எங்கள் சமூகம், ஜம்மு-காஷ்மீரின் வாக்குரிமை மற்றும் குடியுரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுப்பட்டது. இது முழு வால்மீகி சமூகத்திற்கும் ஒரு வரலாற்றுத் தருணம் என்று அவர் கூறினார்.

மேற்கு பாகிஸ்தான் அகதிகள் மற்றும் கூர்க்கா சமூகங்களுடன் வால்மீகிகள் சுமார் 1.5 லட்சம் பேர் உள்ளனர். அவரகள் ஜம்மு, சம்பா மற்றும் கதுவா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக எல்லைப் பகுதிகளில் வசிக்கின்றனர்.

காந்தி நகர் மற்றும் டோக்ரா ஹால் பகுதிகளில் வசிக்கும் சுமார் 12 ஆயிரம் பேர் மாநில சான்றிதழ் இல்லாததால் வாக்குரிமை, கல்வி, வேலை, நில உரிமை ஆகியவற்றை இழந்தனர்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக வால்மீசி, சமாஜ், மேற்கு பாகிஸ்தான் அகதிகள் மற்றும் கூர்க்கா சமூகங்கள் இறுதியாக 75 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் அரசியலமைப்பு உரிமைகளைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.