யுத்தத்தால் மரணித்தோருக்கு நினைவுத் தூபி – அங்கஜன் ஜனாதிபதிக்கு கடிதம்!
யுத்தத்தால் மரணித்தோருக்கான நினைவுத் தூபியை அமைப்பதோடு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜனாதிபதிக்கு அங்கஜன் இராமநாதன் கடிதம் எழுதினார்.
அக்கடிதத்தில்,2016 ஆம் ஆண்டு மார்ச் 08 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க ,இன வேறுபாடின்றி யுத்தத்தின் போது உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் அரசாங்கம் நினைவுத்தூபியொன்றை அமைப்பதோடு, மே 19 ஆம் திகதியை நினைவு நாளாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
அதனை கருத்தில் கொண்டு, யுத்தத்தினால் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் குடும்பங்கள் அனுபவித்த துன்பங்களை ஏற்று, அமைக்கப்படும் நினைவுத்தூபியானது முழு நாட்டின் ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றை வலுப்படுத்துவதோடு நினைவேந்தலுக்கான அடையாளமாகவும் அமையும்.
மேலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ் வழங்குவதற்கும் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். இந்தச் சான்றிதழ்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சட்டச் சிக்கல்களைத் தீர்க்க உதவுவதோடு, இழப்பீடு மற்றும் பிற வகையான ஆதரவை அணுகுவதற்கும் உதவும் – என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.