லெபனானுக்குள் நுழைந்தன இஸ்ரேல் படைகள்: மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம்
இஸ்ரேல் படைகள் லெபனானுக்குள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் உருவாகியுள்ளது.
லெபனானுக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகள்
2023ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 7ஆம் திகதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துவருகிறது இஸ்ரேல்.
ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானை மையமாகக் கொண்ட ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு களத்தில் குதித்தது.
அவ்வப்போது லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திக்கொண்டே இருந்தனர்.
ஹமாஸுக்கு ஆதரவாக களத்தில் குதித்த ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதலில் இறங்க, ஹிஸ்புல்லா மீது கவனத்தைத் திருப்பியது இஸ்ரேல்.
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான Hassan Nasrallah என்பவர் பதுங்கியிருந்த பதுங்கு குழியை சரமாரியாக இஸ்ரேல் தாக்க, வெள்ளிக்கிழமை அவர் கொல்லப்பட்டார்.
அத்துடன் நிற்காமல், தரைவழித் தாக்குதலிலும் ஈடுபட இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக 13,000 இஸ்ரேல் படையினர் லெபனான் எல்லையில் குவிக்கப்பட்டார்கள்.
இஸ்ரேலின் கவச வாகனங்கள் லெபனான் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளதைக் காட்டும் புகைப்படங்களும் வெளியாகின.
இந்நிலையில், இஸ்ரேல் படைகள் லெபனானுக்குள்ளேயே நுழைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதனால், மத்திய கிழக்கு பகுதியில் பெரிய அளவில் போர் வெடிக்கக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
இதற்கிடையில், லெபனான் படைகள், தங்கள் நட்டுக்குள்ளேயே ஐந்து கிலோமீற்றர் தூரத்துக்கு பின்வாங்கியுள்ளதாகவும் Reuters பத்திரிகை தெரிவித்துள்ளது.
லெபனானுக்குள் நுழைந்து, ஹிஸ்புல்லாவை அழித்து, அவர்களுடைய உள்கட்டமைப்பை முழுமையாக அழித்தொழிப்பதற்காகவே இந்த ஊடுருவல் என இஸ்ரேல் ராணுவ அதிகாரிகளின் தலைவரான Lt. Gen. Herzi Halevi தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.