;
Athirady Tamil News

இஸ்ரேல் மீது பாரிய ஏவுகணை தாக்குதலை தொடுத்துள்ள ஈரான் : மத்திய கிழக்கில் கடும் பதற்றம்

0

இஸ்ரேல்(israel) மீது 200 ற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி ஈரான் தாக்குதலை தொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானில்(iran) இருந்து சுமார் 200 ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவ வானொலி தெரிவித்துள்ளது.

அவற்றை வீழ்த்துவதற்காக இடைமறிக்கும் ஏவுகணைகள் ஏவப்பட்டதால் நாடு முழுவதும் சைரன்கள் ஒலிக்கின்றன.

பொதுமக்களுக்கு இஸ்ரேல் விடுத்துள்ள அறிவிப்பு
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) சில நிமிடங்களுக்கு முன்பு ஒரு அறிக்கையில் தாக்குதல் தொடர்கிறது என்று கூறியது, மேலும் பொதுமக்கள் “மேலும் அறிவிப்பு வரும் வரை பாதுகாக்கப்பட்ட இடத்தில் இருக்க வேண்டும்”என தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பிரதான சர்வதேச விமான நிலையமான Ben Gurion இல் புறப்படுதல் மற்றும் தரையிறக்கங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவ வானொலி தெரிவித்துள்ளது.

ஜோர்டானின் வான்பரப்பும் மூடப்பட்டது
அண்டை நாடான ஜோர்டானின் வான்பரப்பும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் அரசு நடத்தும் செய்தி நிறுவனமான IRNA தெஹ்ரானின் இராணுவம் இஸ்ரேலை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவத் தொடங்கியுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

தாக்குதலை உறுதிப்படுத்திய ஈரான்
ஈரானிய அரசு தொலைக்காட்சி IRGC (இஸ்லாமிக் புரட்சிகர காவலர் படை) யின் அறிக்கையை வெளியிட்டது, இஸ்ரேலை நோக்கி “டசின் கணக்கான” ஏவுகணைகள் ஏவப்பட்டதை உறுதிப்படுத்தியது.மேலும் இஸ்ரேல் பதிலளித்தால் தாக்குதல் தொடரும் என எச்சரித்துள்ளது.

ஜூலை மாதம் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் கடந்த வெள்ளிக்கிழமை ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதற்கு பதிலடியாக – மற்றும் லெபனான் மற்றும் பாலஸ்தீன மக்களைக் கொன்றதற்கு பதிலடியாக இந்த ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படுவதாக புரட்சிக் காவலர் படையினர் விவரிக்கின்றனர்.

அதன் விமானப்படை இஸ்ரேலின்”முக்கியமான தளங்களை” குறிவைத்துள்ளதாகவும், விபரங்கள் பின்னர் அறிவிக்கும் என்றும் அது கூறியது.

தாக்குதலுக்கான உத்தரவை அளித்த ஈரான் உச்ச தலைவர்
இதேவேளை இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவுவதற்கான உத்தரவை ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி விடுத்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தெஹ்ரான் “எந்தவொரு பதிலடிக்கும் முழுமையாக தயாராக உள்ளது” என்று ஒரு அதிகாரி மேலும் கூறினார்.

ஈரான் இராணுவ வானொலியின் அறிக்கைகளின்படி, கிட்டத்தட்ட 200 ஏவுகணைகள் ஈரானில் இருந்து இஸ்ரேல் மீது ஏவப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.