இன்னொரு குழந்தையை வரவேற்க தயாராகும் பிரித்தானிய அரச குடும்பம்
பிரித்தானிய அரச குடும்பம் எதிர்வரும் வசந்த காலத்தில் புதிய குழந்தை ஒன்றை வரவேற்க தயாராகி வருவதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
மிகுந்த மகிழ்ச்சி
மறைந்த ராணியாரின் பேரப்பிள்ளையான இளவரசி பீட்ரைஸ் தமது இரண்டாவது குழந்தையை கருவுற்றுள்ளார் என்பதை அறிவித்துள்ளனர். இளவரசி பீட்ரைஸ் மற்றும் Mapelli Mozzi தம்பதியின் மூன்று வயது மகளுக்கு பிறக்கவிருக்கும் குழந்தை தம்பி அல்லது தங்கையாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த அறிவிப்பை புகைப்படம் வெளியிட்டு அரச குடும்பம் அறிவித்துள்ளது. மன்னருக்கும் குறித்த மகிழ்ச்சியான தகவல் தெரியப்படுத்தியுள்ளதாகவும், இரண்டு குடும்பமும் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அரண்மனை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசி பீட்ரைஸின் தாயார் உட்பட பிரித்தானிய அரச குடும்பத்தில் மூவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்துவரும் நிலையில் இந்த மகிழ்வான தகவல் வெளியாகியுள்ளது.
நோயின் பிடியில் இருந்து
கடந்த ஜனவரியில் இருந்தே தோல் புற்றுநோய்க்கான சிகிச்சையில் சாரா இருந்து வருகிறார். மார்பகப் புற்றுநோய் தொடர்பில் சிகிச்சை முன்னெடுக்கப்பட்ட சில மாதங்களில் இன்னொரு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டது.
ஆனால் மே மாதத்தில் இளவரசி பீட்ரைஸ் தெரிவிக்கையில், தாயார் தற்போது நோயின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என குறிப்பிட்டிருந்தார்.
இளவரசி பீட்ரைஸ் மற்றும் Mapelli Mozzi தம்பதியின் மகிழ்வான தருணத்தை பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை ஒன்றை வெளியிட்டு செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
பிறக்கவிருக்கும் குழந்தை முடிசூட்டும் வரிசையில் 11ம் இடத்தில் வருவதால் இளவரசி யூஜீன் 12 வது இடத்திற்கு செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.