குணப்படுத்த முடியாத வைரஸ்… பயணம் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை: 300 பேர்களை தேடும் WHO
ஆபத்தான, குணப்படுத்த முடியாத நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது 26 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
நோய்த்தொற்றைக் கண்டறிந்ததாக
குறித்த பாதிப்புக்கு இதுவரை 8 பேர்கள் மரணமடைந்துள்ளனர். இந்த நிலையில் 300 பேர்கள் நோய் பாதிப்புடன் காணப்படுவதாக குறிப்பிட்டு, அவர்களை தேடும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
WHO வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் பரவும் அந்த தொற்றானது Marburg Virus என்றே அடையாளப்படுத்தியுள்ளனர். ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில்,
30ல் ஏழு மாவட்டங்களில் நோய்த்தொற்றைக் கண்டறிந்ததாகவும், நாட்டின் முதல் நோய் பாதிப்பை உறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவிகிதத்தினர் சுகாதாரப்பணியாளர்கள் என்றே கண்டறியப்பட்டுள்ளது.
நோயாளிகள் அனைவரும் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். WHO மற்றும் அதன் இதர அமைப்புகளின் ஆதரவுடன் ருவாண்டா அரசாங்கம் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறது.
இந்த பாதிப்புக்கு தற்போது முறையான சிகிச்சை அல்லது தடுப்பூசி இல்லை என்றே கூறப்படுகிறது. இதனால் அறிகுறிகள் தென்பட்டால் உடனையே மருத்துவர்களை நாட வேண்டும் என்றும், தொடக்கத்திலேயே முன்னெடுக்கப்படும் சிகிச்சையானது பலனளிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மூன்றாவது நாளில் தொடங்கும்
மேலும், இந்த பாதிப்பின் தாக்கம் என்பது தேசிய அளவில் மிக அதிகமாகவும், பிராந்திய அளவில் அதிகமாகவும், உலக அளவில் குறைவாகவும் WHO மதிப்பிடுகிறது. மட்டுமின்றி எபோலா வைரஸ் போன்றே அறிகுறிகள் காணப்படலாம் என்றும் நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மார்பர்க் வைரஸால் ஏற்படும் பாதிப்பு, அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி மற்றும் கடுமையான உடல்நலக்குறைவு என தொடங்குகிறது. கடுமையான நீர் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் தசைப்பிடிப்பு, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை மூன்றாவது நாளில் தொடங்கும்.
அறிகுறிகள் தொடங்கியதிலிருந்து ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் கடுமையான ரத்தக்கசிவு தோன்றலாம், ஆனால் அனைவருக்கும் இது காணப்படுவதில்லை.
அறிகுறி தோன்றிய எட்டு முதல் ஒன்பது நாட்களுக்குள் மரணம் பெரும்பாலும் நிகழ்கிறது. அதிகமான ரத்தப்போக்கு காரணமாகவே மரணம் ஏற்படுவதாக கூறுகின்றனர்.