அதிக வேலைவாய்ப்பு வழங்கியதில் தமிழ்நாடு முதலிடம் – மத்திய அரசு அறிக்கை
நாட்டிலே அதிக வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மதிப்பு கூட்டுதல்
தொழிற்சாலைகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி 2022-23ஆம் நிதி ஆண்டுக்கான அறிக்கையையே வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி, மொத்த மதிப்பு கூட்டுதல், 2021-2022 ஆண்டை விட 7.3% அதிகரித்துள்ளது. உற்பத்தி பொருளின் அளவும் 21.5% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
மதிப்பு கூட்டுதலில், மகாராஷ்டிரா முதலிடத்திலும், குஜராத் 2வது இடத்திலும், தமிழ்நாடு 3வது இடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிக நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா 2வது இடத்திலும், குஜராத் 3வது இடத்திலும், உத்தரப்பிரதேசம் 4 வது இடத்திலும், கர்நாடகா 5 வது இடத்திலும் உள்ளன.இந்த 5 மாநிலங்கள் மட்டும் உற்பத்தி துறை சார்ந்த வேலைவாய்ப்பில் 55 சதவீத பங்களிப்பை வழங்கி உள்ளன.
இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த தொழிற்சாலைகளில் தமிழ்நாட்டில் 15.66% தொழிற்சாலைகளும், ஒட்டுமொத்த தொழிலாளர்களில் 1.85 கோடி தொழிலாளர்களும் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.