பொதுத் தேர்தலில் ஐ.தே.க எந்த சின்னத்தில் போட்டியிடும் : வெளியாகவுள்ள அறிவிப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடும் என்பது தொடர்பில் நாளை மறுதினத்துக்குள் அறிவிக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க (Ashu Marasinghe) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய கூட்டமொன்று நேற்று (01) கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) தலைமையில் இடம்பெற்றதையடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே ஆசு மாரசிங்க இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “இந்த சந்திப்பின் போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் (SJB) கலந்துரையாடல்களை நடத்துதல் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
பேச்சுவார்த்தை நடத்துதல்
இதில் பங்கேற்ற தரப்பினர் பல யோசனைகளை முன்வைத்தனர். ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இருந்து எரிவாயு கொள்கலன் சின்னத்தைப் பெற முடியுமாயின், பொதுத் தேர்தலில் எரிவாயு சின்னத்தில் போட்டியிடுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு எரிவாயு கொள்கலன் சின்னம் கிடைக்காவிட்டால் யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சியின் பொதுச் செயலாளர்
சின்னம் தொடர்பில் நான்காம் திகதிக்கு முன்னர் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும். அதேநேரம் கட்சியின் பொதுச் செயலாளர் உடல்நலக்குறைவு காரணமாகச் சிகிச்சைகளுக்காக வெளிநாட்டுக்குச் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தலதா அத்துகோரள (Thalatha Atukorale) கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கின்றோம். அதற்கு முன்னர் தற்போதைய செயலாளர் பதவி விலக வேண்டும்“ என ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.