2050-ல் உலகின் அதிசக்திகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும்., முன்னாள் பிரித்தானிய பிரதமர் கணிப்பு
2050-ஆம் ஆண்டில் இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் உலகில் ஆதிக்கம் செலுத்தும் வல்லரசுகளாக உருவெடுக்கும் என்று முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி பிளேர் (Tony Blair) கணித்துள்ளார்.
இதனால் புதிய “சிக்கலான உலக ஆட்சி” உருவாகும், அதை உலகத் தலைவர்கள் வழிநடத்த தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
The Straits Times நாளிதழுக்கு அளித்த பேட்டியில், 71 வயதான பிளேர், இந்த மூன்று நாடுகளால் வடிவமைக்கப்பட்ட பன்முக உலகிற்கு ஏற்ப மற்ற நாடுகள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
“உங்கள் நாடு உலகில் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும், ஏனென்றால் அது பன்முக துருவமாக இருக்கப் போகும் ஒரு உலகமாக இருக்கப் போகிறது,” என்று அவர் கூறியுள்ளார்.
“21-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், அமெரிக்கா, சீனா மற்றும் அநேகமாக இந்தியா மூன்று அதிசக்திகளாக இருக்கும்,” என அவர் தெரிவித்துள்ளார்.
பிளேர், 1997 முதல் 2007 வரை பிரித்ததானிய பிரதமராக இருந்தபோது, அமெரிக்கா ஒரு மிகப்பாரிய ஆற்றல் மிக்க நாடாக இருந்தது.
ஆனால் சீனா மற்றும் இந்தியாவின் எழுச்சி தற்போது உலகத்தின் அரசியல் அமைப்பில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது, எனவே முன்னைய கூட்டுறவுகள் மற்றும் இராஜதந்திரத் திட்டங்களை மறுபரிசீலிக்க வேண்டும் என அவர் விளக்கினார்.
“இந்த மூன்று வல்லரசுகளுடனும் ஓரளவு சமத்துவத்துடன் பேசுவதற்கு நீங்கள் வலுவான கூட்டணிகளை உருவாக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
இதே நேரத்தில், மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான பிரச்சினையைப் பற்றி பேசும்போது, பெரிதும் விரிவடையும் போரின் அபாயம் இருக்கிறது என்றும் பிளேர் எச்சரித்தார்.