பெய்ரூட்டில் பிரித்தானிய தூதரகத்திற்கு அருகில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
லெபனானில் பிரித்தானிய தூதரகம் அருகே அமைந்துள்ள சுகாதார மையம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
இரண்டாவது முறையாக
பெய்ரூட்டில் பச்சூரா பகுதியில் நடந்த தாக்குதலை அடுத்து ஏராளமான கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த வாரத்தில் மட்டும் இரண்டாவது முறையாக மத்திய பெய்ரூட்டை இஸ்ரேல் தாக்கியது.
சுகாதார அமைச்சின் தற்காலிக அறிக்கையின்படி, குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும் 11 பேர் காயமடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது. பின்னர் வெளியான தகவலில் மரண எண்ணிக்கை 5 என அதிகரித்துள்ளதாகவும்,
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருவதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றே கூறப்படுகிறது. ஹிஸ்புல்லா செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தகவலில், இஸ்ரேல் ராணுவம் சுகாதார மையத்தை குறிவைத்தே தாக்குதலை முன்னெடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
கடந்த 11 நாட்களாக
தாக்குதலை அடுத்து, மக்கள் சம்பவம் நடந்த பகுதிக்கு விரைவதும், காயமடைந்தவர்களுக்கு உதவுவதும் காணொளியில் பதிவாகியுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான வளாகமானது லெபனான் தலைநகரில் உள்ள பிரித்தானிய தூதரகத்திலிருந்து ஒரு மைல் தொலைவில் அமைந்துள்ளது.
பெய்ரூட்டின் Dahieh பகுதியில் கடந்த 11 நாட்களாக இஸ்ரேல் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களால் 46 பேர் கொல்லப்பட்டதாகவும் 85 பேர் காயங்களுடன் தப்பியதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் புதன்கிழமை பிற்பகுதியில் தெரிவித்துள்ளது.