பிரித்தானியாவில் விந்தணு, கருமுட்டை பற்றாக்குறை., தானம் செய்பவர்களுக்கு நிவாரண தொகை அதிகரிப்பு
இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் விந்தணு மற்றும் கருமுட்டை தானம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
தானம் செய்பவர்கள் தங்கள் பயணம் மற்றும் தங்குமிடம் போன்ற செலவுகளை சமாளிப்பதற்காக இந்த நிவாரண தொகை வழங்கப்படுகிறது.
விந்தணு தானம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகை £35 இலிருந்து £45 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், கருமுட்டை தானம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகை £750 இலிருந்து £986 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் விந்தணு மற்றும் முட்டை தானத்திற்கான நிவாரண தொகை 2011 முதல் இப்போது முதல் முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தில் முட்டை தானம் செய்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவதில்லை.
பிரித்தானியாவில் முட்டை மற்றும் விந்தணு தானம் செய்வோர் குறைவாக உள்ளனர் என கர்ப்பநல ஆணையம் (HFEA) தெரிவித்துள்ளது.
ஆனால், கருமுட்டை மற்றும் விந்தணு தானம் செய்ய முடிவெடுப்பது ஒரு சிக்கலான விடயம் தான் என்று எச்சரித்துள்ளது.
ஏனெனில் தானத்தின் மூலம் பிறந்த குழந்தைகள் 18 வயதை அடைந்த பிறகு தங்களின் உயிரியல் பெற்றோரை தொடர்பு கொள்ளும் உரிமை வழங்கப்படுகிறது. யாரும் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் தானம் செய்ய முடியாது.
விந்தணு தானதாரர்கள் 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும், மேலும் 3 முதல் 6 மாதங்களுக்கு வாரம் ஒருமுறை மருத்துவமனைக்கு சென்று தானம் செய்ய வேண்டும். தானம் செய்யப்பட்ட விந்தணுக்கள் நன்கு பரிசோதிக்கப்பட்டு, உறைய வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன.
முட்டை தானம் செய்ய 18 முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும். தானம் செய்ய முன்பாக பல மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனை உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.