பீகாரில் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்க சென்ற ஹெலிகாப்டர் நீரில் விழுந்து விபத்து
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் தலைநகரில் உள்ள ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அதேபோல், கனமழையின் காரணமாக ஆங்காங்கே நிலச் சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. வெள்ள பெருக்கு மற்றும் நிலச் சரிவுகளில் சிக்கி நேபாளத்தில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்த கன மழையால், நேபாள எல்லையை ஒட்டி அமைந்துள்ள பீகார் மாநிலத்தின் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பீகார் எல்லைக்கு அருகே இருக்கும் தடுப்பணைகளில் இருந்து திடீரென தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், லட்சக் கணக்கான கன அடி நீர் வெளியேறி பீகார் மாநிலத்தின் 16 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து பீகார் அரசு மக்களுக்கான அடிபடை வசதிகள், மீட்பு பணிகள், வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்குதல் உள்ளிட்டவற்றை செய்து கொடுத்து வருகிறது. பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்து நிவாரணப் பணிகளையும் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிதாமாரி எனும் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு விமானப்படை ஹெலிகாப்டர் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்றது. அந்த ஹெலிகாப்டர் ஆராய் என்ற பகுதியில் பயணித்தபோது, எஞ்ஜின் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது துரிதமாக செயல்பட்ட ஹெலிகாப்டர் விமானி, குடியிருப்புகள் இல்லாத பகுதிக்கு ஹெலிகாப்டரை இயக்கி நீர்நிலை பக்கமாக திருப்பியுள்ளார். பிறகு ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து நீர்நிலைக்குள் விழுந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த விபத்து நடந்ததும், அங்கிருந்தவர்களும், மீட்பு படையினரும், விபத்தில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் விமானிகள் மற்றும் மீட்புப் பொருட்களை கொண்டு சென்ற வீரர்கள் உள்ளிட்டோர் காயமடைந்தனர். மீட்கப்பட்ட இவர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.