கொழும்பு துறைமுக மனிதப்புதைகுழியில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
கொழும்புத் துறைமுகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மனிதப்புதைகுழி அகழ்வாராய்ச்சியில் இதுவரை எட்டு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அகழ்வாராய்ச்சியை மேற்பார்வையிடும் ஆலோசகரான சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.
இவற்றில் இரண்டு எலும்புக்கூடுகள் ஏற்கனவே தோண்டி எடுக்கப்பட்டு தற்போது பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாம் கட்ட அகழாய்வு எதிர்வரும் 17ஆம் திகதி தொடங்கவுள்ளது எச்சங்களின் தோற்றம் மற்றும் சூழல் பற்றிய கூடுதல் தகவல்களைக் கண்டறிய அதிகாரிகள் தொடர்ந்து கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வருகின்றனர்.
புதைகுழி தொடர்பான அகழ்வு
இந்தப் பாரிய புதைகுழி தொடர்பான அகழ்வு மற்றும் விசாரணைகள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி சுனில் ஹேவகே மற்றும் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியல் ராஜ் சோமதேவ ஆகியோரின் தலைமையில் இடம்பெற்று வருகின்றன.
கடந்த ஜூலை 13ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்துக்குச் செல்லும் புதிய அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளுக்காக நிலத்தைத் தோண்டும்போது கொழும்புத் துறைமுகத்தில் அமைந்துள்ள பழைய செயலக வளாகத்தில் முதன்முறையாக மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
நீதிமன்றத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நீதிவான் பண்டார இலங்கசிங்க முன்னிலையில் கடந்த செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி வியாழக்கிழமை அந்த இடத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.