அநுர அரசிடம் சுமந்திரன் விடுத்துள்ள பகிரங்கக் கோரிக்கை
கடந்த ஆட்சியில் மதுபானசாலைகளைப் பெற்று வழங்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் அனைவரது பெயர்களையும் தற்போதைய அரசு உடனடியாகப் பகிரங்கப்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் (colombo) நேற்று (2.10.2024) புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே எம்.ஏ.சுமந்திரன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று நாடு முழுவதும் மதுபானச் சர்ச்சை நிலவுகின்றது. இதனால் அந்தப் பட்டியலை அரசு உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்.
அரசியல்வாதிகள் சிபார்சு
எந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அரசியல்வாதிகள் சிபார்சு செய்து இந்த அதிகூடிய சாராயக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும்.
அது தேர்தலுக்கு முன்பு தெரிய வந்தால்தான் அப்படியானவர்களை விலக்கி வைக்கலாம். இது ஒரு சமூக விரோதச் செயற்பாடு. நாட்டிலே மதுபோதை தொடர்பில் சமூக மட்டத்தில் பெரும் பிரச்சினை எழுந்துள்ளது.
இளையவர்களுக்கு இதனால் பாதிப்பு இருக்கின்றது. அப்படியான நிலையிலும் மதுபானசாலைகளை அதிகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டவர்கள், இரகசியமாக ஈடுபட்டவர்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.
அனுமதிப் பத்திரங்களை விற்றுள்ளனர்
அவர்களது பெயர்கள் தெரிய வேண்டும். இது மட்டுமன்றி பணத்துக்கு ஆதாயமாக்கியும் உள்ளனர் அதாவது அனுமதிப் பத்திரங்களை விற்றுள்ளனர் என்ற செய்தியும் எட்டியுள்ளது.
ஆகையினால் அவர்கள் யார் என்பதை நாடறிய வெளிப்படுத்த வேண்டும் இதேநேரம் மக்கள் சேவைக்கு வருபவர்களுக்கு மிக அதிகமான சலுகைகள் இதுவரை கொடுக்கப்பட்டுள்ளன.
ஆகையினாலே இந்தச் சலுகைகளைக் குறைக்க எமது பூரண ஆதரவு கிடைக்கும். பொருளாதார நெருக்கடி நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இத்தனை சலுகைகள் தேவையற்றது.
அதிகமான சலுகைகளைக் குறைக்கின்றபோது நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.