பொருளாதார நிலையை சீரமைக்கும் முயற்சியில் பிரான்ஸ்., வரி உயர்வு தற்காலிகமே-அரசு உறுதி
பிரான்ஸ் அரசு தனது பொருளாதார நிலையை சீரமைக்கும் முயற்சியில், புதிய வரிகள் மற்றும் செலவுக் குறைப்புகளைத் திட்டமிட்டுள்ளது.
அதில், வரி உயர்வுகள் குறிப்பாக செல்வந்தர்களை மட்டுமே தாக்கும் என்றும், அவை தற்காலிகமானதாக இருக்கும் என்றும் பிரான்ஸ் நிதி அமைச்சர் ஆண்டோயின் ஆர்மாண்ட் அறிவித்துள்ளார்.
பிரான்சின் மாபெரும் கடனைக் குறைப்பதற்காக அரசு செலவுகளை வெகுவாக குறைப்பது அவசியம் என பிரதமர் மிசேல் பார்னியர் கூறியுள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ள நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான பொருளாதார சீரமைப்பில், 40 பில்லியன் யூரோக்கள் வரை செலவுகளைச் சீரமைப்பது பிரான்ஸ் அரசின் முக்கிய குறிக்கோளாக உள்ளது.
இதனை இரண்டு வழிகளில் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதில் ஒன்று, செல்வுகளில் மூன்றில் ஒரு பங்கை குறைப்பதும், மற்றொன்று புதிய வரிகள் அமுல்படுத்துவதும் ஆகும்.
உயர்ந்த வருமானம் கொண்டவர்களிடமே புதிய வரிகள் விதிக்கப்படும் என்றும், இவை தற்காலிகமானதாக இருக்கும் என்றும் ஆர்மாண்ட் உறுதிபடக் கூறினார். அதே நேரத்தில், சாதாரணவர்களின் வருமான வரிப் பிரிவுகளில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது எனவும் உறுதி அளித்தார்.
பாரிய மற்றும் மிகப்பாரிய நிறுவனங்களுக்கும் கூடுதல் வரி சுமைகள் விதிக்கப்படும், ஆனால் இந்தச் சுமை பல ஆண்டுகள் நீடிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
அதனுடன், 2029ஆம் ஆண்டுக்குள், ஐரோப்பிய ஒன்றியத்தின் செலவுக் கட்டுப்பாட்டான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)யில் 3% இலக்கைக் கடைப்பிடிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் பார்னியர் கூறியதையும் அவர் நினைவுபடுத்தினார்.