தாக்குதலுக்கு தயாராகுங்கள்… செங்கடல் கப்பல்களுக்கு ஹவுதிகள் மின்னஞ்சல் எச்சரிக்கை
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக செங்கடல் பாதையில் பயணிக்கும் கப்பல்களுக்கு ஈரான் ஆதரவு ஹவுதிகள் மின்னஞ்சல் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஹவுதிகள் தாக்குதல்
காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே செங்கடல் பாதையில் பயணிக்கும் சுமார் 100 கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அவர்கள் இரண்டு கப்பல்களை மூழ்கடித்து, மற்றொன்றைக் கைப்பற்றி, குறைந்தது நான்கு கடற்படையினரைக் கொன்றுள்ளனர். இஸ்ரேல் துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்கள் அல்லது இஸ்ரேலில் இருந்து புறப்படும் கப்பல்கள் மீதே ஹவுதிகள் தாக்குதல் முன்னெடுத்துள்ளனர்.
தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கும் மின்னஞ்சல்களை கப்பல் நிர்வாகங்களுக்கு மே மாத இறுதியில் அனுப்பியுள்ளனர். குறைந்தது 6 கிரேக்க கப்பல் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.
நவம்பர் மாதத்தில் இருந்து இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா தொடர்புடைய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், இஸ்ரேலுடன் தொடர்பில்லை என்றாலும், கொஞ்சம் தொடர்பிருந்தாலும் கிரேக்க கப்பல் நிறுவனங்களையே ஹவுதிகள் குறி வைத்துள்ளனர்.
மத்திய கிழக்கில் போர் நெருக்கடி
2014ல் ஹவுதிகள் சனா நகரை கைப்பற்றி, சர்வதேச நாடுகளால் அடையாளப்படுத்தப்பட்ட அரசாங்கத்தை வெளியேற்றினர். கடந்த ஜனவரி மாதம் ஹவுதிகளை பயங்கரவாத குழுக்கள் என அமெரிக்கா அடையாளப்படுத்தியது.
கப்பல் நிர்வாகங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய விவகாரத்தை ஹவுதிகள் உறுதி செய்ய மறுத்துள்ளனர். ஹவுதிகள் அளித்த நெருக்கடியால் பல சரக்கு கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றி மிக நீண்ட பாதையில் செல்ல வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால் சூயஸ் கால்வாய் வழியாக போக்குவரத்து நவம்பர் 2023 க்கு முன் மாதத்திற்கு சுமார் 2,000 கப்பல்கள் என இருந்து ஆகஸ்டில் 800 ஆக குறைந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது மத்திய கிழக்கில் போர் நெருக்கடி அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. ஹிஸ்புல்லா தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லா உட்பட லெபனானில் போராளித் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது 180 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளால் ஈரான் தாக்கியது குறிப்பிடத்தக்கது.