அசைவ உணவு, பூண்டு, வெங்காயம் கட்.. உச்சநீதிமன்ற கேண்டீன் முடிவால் வெடித்த புதிய சர்ச்சை!
ஒன்பது நாளுக்கு கொண்டாடப்படும் நவராத்திரி விழா இன்று முதல் ஆரம்பமானது. இந்த விழாவை கொண்டாடுபவர்கள் ஒன்பது நாளும் தங்கள் வீடுகளில் கொலு வைத்து தினமும் மாலை சிறப்பு வழிபாடு நடத்துவர். ஒன்பதாவது நாள் கோயில்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இந்நிலையில், உச்சநீதிமன்றம் உணவகத்தில் நவராத்திரியை முன்னிட்டு பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் அங்கு பணியாற்றுபவர்களுக்கென உணவகம் ஒன்று இயங்கிவருகிறது. இந்த உணவகத்தில் அனைத்து விதமான உணவும் பரிமாறப்பட்டுவந்தது. தற்போது நவராத்திரி விழா இன்று துவங்கியதைத் தொடர்ந்து அங்கு அசைவ உணவு வழங்கப்படமாட்டாது என்றும், பூண்டு மற்றும் வெங்காயம் ஆகியவை உணவில் சேர்க்கப்படாது என்றும் அறிவித்திருப்பதாக தெரிகிறது.
இதற்கு கவலை தெரிவித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் எல்லாம் இணைந்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பதிவு சங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
ந்தக் கடிதத்தில், “இதுவரை நவராத்திரி காலத்தில் அதனை அனுசரிப்பவர்கள் தங்கள் நவராத்திரி உணவுகளை வீட்டில் இருந்து கொண்டுவருவதும், மற்றவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருந்துவந்ததே மரபு. ஆனால், இந்த நவராத்திரி அந்த மரபு மாறியுள்ளது. தற்போது வெறும் நவராத்திரி உணவு மட்டுமே வழங்க உணவகம் முடிவு செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற உணவகம் அனைவருக்குமானது. நாம் அனைவரும் அதைச் சார்ந்து இருக்கிறோம். ஒரு சிலரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக அசைவம் அல்லது வெங்காயம்-பூண்டுடன் உணவைப் பரிமாறாதது நமது பன்மைத்துவ மரபுகளுக்குப் பொருந்தாது. மேலும் ஒருவருக்கொருவர் மரியாதை இல்லாமல் போகும்.
எனவே உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பதிவு சங்கம், உச்சநீதிமன்ற உணவகத்தில் எப்போதும் வழங்கப்படும் உணவையே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கட்டுப்பாடுகள் ஒரு தவறான முன்னுதாரணத்தை முன்னெடுக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மாற்றத்தை அனுமதிப்பது எதிர்காலத்தில் மேலும் திணிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும், உச்ச நீதிமன்ற உணவகம் நீண்டகாலமாக நிலைநிறுத்தி வரும் பன்முகத்தன்மை மற்றும் பன்மைத்துவத்தை மீறும் சாத்தியம் இருப்பதாகவும் கடிதத்தில் வழக்கறிஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அனைத்து தனிநபர்களின் உணவு விருப்பங்களும் மதிக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், நவராத்திரி உணவுடன் உச்சநீதிமன்றத்தின் வழக்கமான உணவு முறையையும் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.