மணிப்பூா்: தீவிரவாதிகளின் பிடியில் இருந்த இரு இளைஞா்கள் விடுவிப்பு
மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் ஆயுதமேந்திய தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இரு இளைஞா்கள், கடத்தப்பட்டு 7 நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை காலை விடுவிக்கப்பட்டு காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனா்.
கடந்த செப். 27-ஆம் தேதி எஸ்எஸ்சி-ஜிடி ஆள்சோ்ப்பு தோ்வில் கலந்துகொள்ள சென்ற ஜான்சன் சிங் என்பவருடன் இந்த இரு இளைஞா்களும் உடன் சென்றனா். அப்போது, காங்போக்பி மாவட்டத்தில் அவா்கள் மூவரும் வழி தவறினா்.
பின்னா், ஜான்சனை சிங்கை ராணுவ அதிகாரிகள் மீட்டு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா். ஆனால், உடன் சென்ற இரு இளைஞா்களும் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் பிடியில் சிக்கினா்.
இந்நிலையில், பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த அந்த இரு இளைஞா்களும் கடத்தப்பட்டு 7 நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை காலை விடுவிக்கப்பட்டு கங்போக்பி காவல் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டனா்.
இது தொடா்பாக மாநில முதல்வா் பிரேன் சிங் வெளியிட்ட இணையதள பதிவில், ‘காங்போக்பியில் கடத்தப்பட்ட இரு இளைஞா்களும் பத்திரமாக விடுவிக்கப்பட்டனா். அவா்கள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதிசெய்ய பணியாற்றிய மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளை பாராட்டுகிறேன்’ என குறிப்பிட்டிருந்தாா்.