;
Athirady Tamil News

யார் அந்த அரசியல்வாதிகள்? ஜனாதிபதி அநுரவிடம் கோரிக்கை விடுத்த சுமந்திரன்!

0

நாட்டில் மதுபானசாலை உத்தரவு பத்திரங்களை பெற்றுக்கொண்ட அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்களை உடனடியாக வெளியிடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றையதினம் (03-10-2024) மாலை எம்.ஏ சுமந்திரனுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையே விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு அரை மணித்தியாலத்திற்கு அதிகமாக நிகழ்ந்த நிலையில் பல்வேறுபட்ட விடயங்கள் அதில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்பதான அரசியல் சூழ்நிலைகள், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் என்பன தொடர்பாக நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பின்னரான, புதிய அரசியலமைப்பு தயாரிப்பு தொடர்பாகவும், அவர்களது தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டபடி 2015 – 2019 இற்கு இடைப்பட்ட காலத்தில் முன்னடுக்கப்பட்ட தேர்தல் வரைபினை அமுல்படுத்துதல் தொடர்பாகவும், இச் செயற்பாடுகளில் தமிழர் தரப்பு பிரதிநிதித்துவம் அவசியம் என்பதனையும் சுமந்திரன் வலியுறுத்தியிருந்தார்.

மேலும், ஊழல் ஒழிப்பு விவகாரங்கள் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் அதற்கான சட்ட ஏற்பாடுகள் சம்பந்தமாகவும் ஜனாதிபதிக்கு தனது ஒத்துழைப்பினை வழங்குவதாக தெரிவித்திருந்தார்.

இவ் விடயத்தில் முறை கேடாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சிபாரிசின் பேரில் கொடுத்த மதுபானசாலை அனுமதி பத்திரங்கள் தொடர்பான பெயர் பட்டியல் வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்படுவது மக்கள் மத்தியில் புதிய ஆட்சியாளர்களை குறித்தான சந்தேகத்தினையும் ஏற்படுத்துவதனை அவர் சுட்டிக்காட்டியிருந்ததோடு உடனடியாக அவ் அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலினை வெளியிடுமாறும் கோரிக்கையினை முன்வைத்திருந்தார்.

தொடர்ச்சியாக இந்த விடயங்கள் தொடர்பாக தொடர்பாடுவதாகவும் வேண்டிய ஒத்துழைப்பினை வழங்குவதாகவும் அவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தெரிவித்திருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.