யாழில். காணி விற்றவரிடம் கொள்ளை – தரகரின் வழி நடத்தலில் தான் கொள்ளை இடம்பெற்றதாக பொலிஸ் தெரிவிப்பு
காணி தரகரின் வழிநடத்தலில் தான் ஒரு கோடி ரூபாய் பணம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
யாழ்ப்பாணம் , சங்குவேலி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.
அவர் கடந்த புதன்கிழமை சேந்தான்குளம் பகுதியில் உள்ள தனது காணியை விற்ற பணத்துடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை, மோட்டார் சைக்கிள் ஒன்றில் பின்தொடர்ந்து வந்த இருவர் அவரை வீதியில் வழிமறித்து அவரை தாக்கி விட்டு பணம் , கடவுச்சீட்டு , இலட்ச ரூபாய்க்கள் பெறுமதியான கையடக்க தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்து, சென்றிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த நிலையில்,
காணியை விற்றவர் , காணியை வாங்கியவர் ஆகியோர், சட்டத்தரணி முன்பாக உறுதி எழுதிய பின்னர் பணத்தினை கைமாற்றிக்கொண்டனர். அதன் போது , அவர்களுடன் காணி விற்பனை தரகரும் இருந்துள்ளார்.
காணியை விற்றவர் , பணத்துடன் வீடு திரும்பும் போது, அவரிடம் பணம் கொள்ளையடிக்கப்பட்டமையால் , அவர் பணத்துடன் செல்லும் விடயம் தெரிந்தவர்களின் தகவலின் அடிப்படையில் தான் கொள்ளை நடந்துள்ளதாக சந்தேகித்த பொலிஸார் , தரகர் மீது சந்தேகம் கொண்டு அவரை விசாரணை வலயத்திற்குள் கொண்டு வந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விசாரணைகளை தொடர்ந்து , ஊரெழு பகுதியில் உள்ள தரகரின் வீட்டினை பொலிஸார் சோதனையிட்ட போது , வீட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் , கையடக்க தொலைபேசி உள்ளிட்டவற்றை மீட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து தரகரிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த போது, காணி விற்ற பணத்துடன் செல்வதனை தனது மகனுக்கு கூறியதாக தெரிவித்ததை அடுத்து, தரகரின் மகன் மற்றும் மகனின் நண்பன் ஆகியோரையும் பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , அவர்கள் மூவரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.