இந்தியர்கள் உட்பட புலம்பெயர்ந்தோர் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச்சூடு: ஆறு பேர் பலி
இந்தியர்கள் உட்பட புலம்பெயர்ந்தோர் பயணித்த வாகனம் ஒன்றின்மீது மெக்சிகோ ராணுவ வீரர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், ஆறு புலம்பெயர்ந்தோர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புலம்பெயர்ந்தோர் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச்சூடு
செவ்வாயன்று, குவாதிமாலா நாட்டு எல்லையில், புலம்பெயர்ந்தோர் பயணித்த ட்ரக் ஒன்றின்மீது மெக்சிகோ நாட்டு ராணுவ வீரர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
அதில், ஆறு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தனர், 10 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் மூன்று பேர் எகிப்து நாட்டவர்கள். ஒருவர் ஹோண்டூரா நாட்டவர், ஒருவர் பெரு நாட்டவர், மற்றொருவர் எல் சால்வடார் நாட்டவர் என்று கூறப்படுகிறது.
ஆனால், தங்கள் நாட்டவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என ஹோண்டூரா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
சில ஊடகங்கள், உயிரிழந்தவர்களில் ஒருவர் இந்தியர் என தெரிவித்துள்ளன.
அந்த வாகனத்தில் பயணித்த மற்ற 27 புலம்பெயர்வோரில் இந்தியர்கள், எகிப்து நாட்டவர்கள், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் கியூபா நாட்டவர்களும் அடங்குவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கிடையில், புலம்பெயர்ந்தோர் ட்ரக் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவ வீரர்களை மெக்சிகோ அதிகாரிகள் கைது செய்து விசாரணைக்குட்படுத்திவருகிறார்கள்.