;
Athirady Tamil News

அக்டோபர் நினைவேந்தல் பேரழிவில் முடியலாம்… ஜேர்மனி உளவுத்துறை தலைவர் எச்சரிக்கை

0

இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதலின் ஓராண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாட்டில் அமைதியின்மையை தூண்டலாம் என ஜேர்மனியின் உளவுத்துறை தலைவர் எச்சரித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை

இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் படைகள் திடீர் தாக்குதலை முன்னெடுத்ததன் நினைவு நாள் எதிர்வரும் திங்கட்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. குறித்த தாக்குதல் சம்பவமானது காஸா மீதான போர் பிரகடனத்திற்கு இஸ்ரேலை தூண்டியது.

மட்டுமின்றி, ஹமாஸ் படைகளை ஆதரிக்கும் லெபனான் மற்றும் ஈரான் மீதும் இஸ்ரேல் தாக்குதலை நடத்த காரணமாக அமைந்தது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான சூழல் ஜேர்மனியிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என உளவுத்துறையின் முதன்மை அதிகாரிகளில் ஒருவர் Thomas Haldenwang எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யூத எதிர்ப்பு மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான விரோதம் உள்ளிட்டவை தீவிரவாதிகள், பாலஸ்தீனிய சார்பு தீவிரவாதிகள் மற்றும் தீவிர வலது மற்றும் தீவிர இடது சார்பு தீவிரவாத குழுக்களுக்கு இடையே இணைக்கும் அம்சமாக அமையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஓராண்டு நிறைவு நாள் ஆர்ப்பாட்டங்கள், நாடு முழுவதும் அமைதியின்மையை தூண்டலாம் என்றும் தெரிவித்துள்ளார். அக்டோபர் 7 தாக்குதலின் உத்தியோகபூர்வ நினைவேந்தல் நிகழ்வுகள் தவிர, ஜேர்மனியில் பல பாலஸ்தீனிய சார்பு ஆர்ப்பாட்டங்கள் வார இறுதி மற்றும் திங்கட்கிழமைகளில் திட்டமிடப்பட்டுள்ளன.

பெர்லின் நகரில் பொலிஸ் தொழிற்சங்க செய்தித்தொடர்பாளர் பெஞ்சமின் ஜெட்ரோ தெரிவிக்கையில், எதிர்வரும் நாட்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை உள்ளது என்றார்.

பெண்கள் மற்றும் சிறார்கள்

சில பாலஸ்தீன ஆதரவாளர்கள் வெளிப்படுத்தும் வெறுப்பு, யூத எதிர்ப்பு மற்றும் வன்முறை மீறல்கள் அச்சத்தை விதைக்கும் வகையில் உள்ளது என்றார்.

காஸா போர் தொடங்கியதில் இருந்து யூத-விரோத குற்றங்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஜேர்மன் நகரங்களில் உயர்ந்துள்ளது என Haldenwang தமது அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் எல்லையில் இசை விழா ஒன்றில் திடீரென்று புகுந்த ஹமாஸ் படைகள் கொலைவெறி தாக்குதலை முன்னெடுத்தது. இதில் 1,205 பேர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இஸ்ரேல் முன்னெடுத்து வரும் தாக்குதல்களில் இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 41,788 கடந்துள்ளது. இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.