ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவரும் இஸ்ரேலிய விமான தாக்குதலில் பலி…!
லெபனானில்(lebanon) இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராக கருதப்பட்ட ஹசீம் சபிதீன்(Hashem Safieddine) கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 28ம் திகதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையிடத்தை குறிவைத்து இஸ்ரேல் குண்டுமழை பொழிந்தது. இந்த அதிரடி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.
தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்
இதனை தொடர்ந்து லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது.இந்த தாக்குதலில் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர்கள் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம்(04) அதிகாலை இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தில் பாதாள அறையில் அமைந்திருந்த ஹிஸ்புல்லாவின் உளவுப்பிரிவு தலைமையகத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
ஹசீம் சபிதீனை குறிவைத்து தாக்குதல்
ஹிஸ்புல்லா தலைவராக இருந்த நஸ்ரல்லா ஏற்கனவே இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில் ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராக ஆவார் என கருதப்பட்ட ஹசீம் சபிதீனை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஹசீம் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் வான்வழி தாக்குதலுக்கு பின் ஹசீம் சபிதீன் இருப்பிடமோ அவரது நிலை குறித்தோ இதுவரை ஹிஸ்புல்லா எந்த தகவலும் வெளியிடவில்லை. இதன் மூலம் வான்வழி தாக்குதலில் ஹசீம் சபிதீன் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.