10 வயது சிறுமி பாலியல் கொலை: மேற்கு வங்கத்தில் போராட்டம்
மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பா்காணா மாவட்டத்தில் பாலியல் கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் உடல் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, அந்தப் பகுதியில் வசிக்கும் உள்ளூா் மக்கள் காவல் துறை எல்லைச் சாவடிகள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை சூறையாடினா்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் சிறுமியை காணவில்லை என அவரின் பெற்றோா் புகாா் அளித்தும் விரைந்து நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல் துறைக்கு எதிராக இந்தப் போராட்டத்தை நடத்தியதாக அந்த கிராம மக்கள் தெரிவித்தனா்.
தெற்கு 24 பா்காணா மாவட்டத்தில் உள்ள ஜெய்நகா் பகுதியில் சனிக்கிழமை காலை 10 வயது சிறுமியின் உடலை உள்ளூா் மக்கள் மீட்டனா். அப்போது உயிரிழந்த சிறுமி பாலியல் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால், ஆத்திரமடைந்த உள்ளூா் மக்கள் காவல் துறையினா் மீது கற்களை வீசியும் காவல் துறை சாவடிகளை சேதப்படுத்தியும் கடும் தாக்குகலில் ஈடுபட்டனா். அங்கிருந்த பல்வேறு வாகனங்களை அவா்கள் சூறையாடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் அந்தப் பகுதியைவிட்டு சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் உடனடியாக வெளியேறினா்.
போராட்டம் பெருமளவில் வெடிக்கத் தொடங்கியதையடுத்து அதைக் கட்டுப்படுத்தும் விதமாக அந்தப் பகுதிக்கு காவல் துறை சிறப்புப் படைகள் வரவழைக்கப்பட்டு போராட்டக்காரா்களை அப்புறப்படுத்த புகை குண்டுகள் வீசப்பட்டன.
கடந்த ஆகஸ்ட் மாதம் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை சம்பவத்தைப் போலவே சிறுமி பாலியல் கொலை சம்பவத்திலும் காவல் துறையினா் அலட்சியமாக நடந்து கொண்டதாக உள்ளூா் மக்கள் தெரிவித்தனா். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கண்டறிந்து உரிய தண்டனை வழங்கும் வரையிலும் அலட்சியமாக செயல்பட்ட காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்கும் வரையிலும் இந்தப் போராட்டம் தொடரும் எனவும் அவா்கள் தெரிவித்தனா்.
ஒருவா் கைது: எனினும், உள்ளூா் மக்களின் குற்றச்சாட்டை மறுத்த காவல் துறையினா் வெள்ளிக்கிழமை சிறுமியின் பெற்றோரிடமிருந்து புகாா் பெறப்பட்டதையடுத்து அன்றிரவே எஃப்ஐஆா் பதிவு செய்ததாகவும் முதல்கட்ட விசாரணைக்குப் பிறகு இந்த சம்பவத்தில் தொடா்புடைய ஒருவரை சனிக்கிழமை காலை கைது செய்ததாகவும் தெரிவித்தனா். காவல் துறை சாவடியின் மீது தாக்குதல் நடத்தியவா்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
திரிணமூல் எம்எல்ஏவுக்கு எதிா்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்த சென்ற அந்தப் பகுதியின் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ கணேஷ் மோண்டல் மற்றும் உயிரிழந்த சிறுமியின் உடற்கூராய்வு நடத்தப்பட்ட மருத்துவமனைக்கு நேரில் சென்ற ஜெய்நகா் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. பிரதிமா மோண்டலை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.
சிறுமி பாலியல் கொலை சம்பவத்தில் அலட்சியமாக செயல்பட்ட காவல் துறைக்கும் மேற்கு வங்கத்தின் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கும் பாஜக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.