;
Athirady Tamil News

பொதுதேர்தலில் யாழில் இணைந்து களமிறங்கும் சுமந்திரன் – சிறீதரன்

0

நடைபெறவுள்ள பொதுதேர்தலில் யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனும் சிறீதரனும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் நேற்று (05) இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக் குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது தமிழரசுக் கட்சியின் ஊடக பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

திருகோணமலை மற்றும் அம்பாறையில் தமிழரசுக் கட்சி சின்னத்தில் போட்டியிட ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதுடன், நானும் சிறிதரனும் யாழில் போட்டியிடுவோம். அத்துடன் எமது கட்சியில் போட்டியிட பெண்களுக்கு அழைப்பு விடுகின்றோம்.

பல கட்சிகள்
மத்திய குழுவால் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர் தெரிவுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. 11 பேர் அதில் கலந்து கொண்டோம். இதன்போது, வேட்பாளர் நியமனம் தொடர்பாக மாவட்ட ரீதியாக கலந்துரையாடினோம். எந்தவொரு மாவட்டத்தினதும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. அதனால் தெரிவிக்குழுக் கூட்டம் தொடர்ந்தும் நாளையும் (06.10) இடம்பெறும்.

அதன் பின்னரே முடிவு வெளியிடப்படும். விசேடமாக திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டம் தொடர்பாக ஆராயப்பட்டது. குறித்த மாவட்டங்களில் ஒரு தமிழ் பிரதிநித்துவமேம வரக்கூடிய நிலமை இருக்கிறது.

கடந்த முறை அம்பாறை மாவட்டத்தில் நாம் தமிழ் பிரதிநித்துவத்தை இழக்க நேரிட்டது. பல கட்சிகளும் போட்டியிட்டால் திருகோணமலையிலும் இம்முறை அதுவே நிகழும்.

இதனால், அந்த இரு மாவட்களில் தமிழ் பிரதிதிநித்துவத்தை தக்க வைப்பதற்காக ஏனைய தமிழ் கட்சிகளுடனும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

பெண் வேட்பாளர்கள்

விசேடமாக திருகோணமலை மாவட்டத்தில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக திருகோணமலை ஆயர் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார். அவருடன் இன்று (05.10) மாலை 4.30 இற்கு சந்திப்பு ஒன்று உள்ளது.

அவரை சந்தித்து பேச ஒரு குழு திருகோணமலை செல்கின்றது. இவ்விரு மாவட்டங்களிலும் தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் வீட்டுச் சின்னத்திலும் ஏனைய கட்சி வேட்பாளர்களையும் இணைத்து போட்டியிட முடியும்.

இது தொடர்பாக அவதானம் செலுத்தி வருகின்றோம். அடுத்து, இம்முறை மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள். இளையவர்கள், புதியவர்களை விரும்புகிறார்கள். எமக்கு கிடைத்த வேட்பாளர் பட்டியல்களில் பெண்களின் பெயர் குறைவாக உள்ளது. எமக்கு ஆர்வமுள்ள, திறமையான, செயறட்பாட்டு திறன் கொண்ட, எம்மோடு இணைந்து பயணிக்கக் கூடிய பெண்கள் தேவையாகவுள்ளது.

நாம் அவர்களுக்கு போட்டியிட சந்தர்ப்பம் வழங்க தயாரகவுள்ள போதும் பெண்கள் பலரும் முன்வரவில்லை. பெண்கள் அமைப்புக்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

மத்திய குழுவின் தீர்மானம்

அத்துடன் கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதில்லை என மத்திய குழு எடுத்த தீர்மானத்தை எமது தெரிவுக் குழுவும் உறுதி செய்துள்ளது. எனவே, அவர்களை தவிர்த்து புதிய வேட்பாளர்களையும், இளைஞர்களையும் களமிறக்கவுள்ளோம்.

ஜனாதிபதி தேர்தல் விடயத்தில் மத்திய குழு எடுத்த தீர்மானத்தை மீறி சிறீதரன் மற்றும் சிறிநேசன் ஆகியோர் செயற்பட்டிருந்தனர். அதில் ஏற்கனவே, போட்டியிட்டு தோல்வியுற்றவர்களுக்கு சந்தர்ப்பம் இல்லை என தீர்மானம் எடுக்கப்பட்டதால் சிறிநேசன் போட்டியிட முடியாது.

சிறீதரன், மத்திய குழுக் கூட்ட தீர்மானத்தை மீறி செயற்பட்டதால் அவரை போட்டியிட அனுமதிக்கக் கூடாது அல்லது அவராக விலகியிருக்க வேண்டும் என நான் கோரினேன். இதை மறுத்து தானும் போட்டியிடப் போவதாக சிறீதரன் தெரிவித்தார்.

இந்நிலையில், தெரிவுக் குழுவும் நாங்கள் இருவரும் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அதற்கு அமைவாக நானும், சிறீதரனும் யாழ். மாவட்டத்தில் போட்டியிடுவோம். நிச்சயமாக வெல்வோம். ஏனைய 7 பேரையும் இளைஞர்களாக களமிறக்குவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.